சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவும் கோரி, மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் பிள்ளையாளர் ஆலய வளாகத்துக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதமொன்று சனிக்கிழமை (17) காலை தொடக்கம் இடம் பெற்று வருகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதம் இடம்பெற்றுவருகின்றது.
ஆரம்பமான இவ் அடையாள உண்ணாவிரதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறப்பினர்களான ஞா.சிறிநேசன், எஸ்.வியாளேந்திரன், அம்பாரை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கவீந்திரன்(றொபின்) மற்றும் கிழக்கு மாகாண விவாசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.அரியநேந்திரன், பொன். செல்வராசா மற்றும் கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன்(ஜனா) இரா.துரைரத்தினம் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கை அரசே இதுவா நல்லாட்சி, ஜனாதிபதி அவர்களே அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், அரசே சிறையில் உண்ணாவிரதமிருக்கும் எமது உறவுகளை சாகடிக்காதே, காலம் கடத்தாதே கைதிகளை விடுதலை செய், மரணம்தான் எமது விடுதலையா? என்பன போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்போர் தாங்கியுள்ளனர்.
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளோர் வலிறுத்துகின்றனர்.
0 Comments:
Post a Comment