19 Oct 2015

மாற்று முஸ்லிம் அணிகள் உருவெடுக்கும் அபாயத்தை முஸ்லிம் காங்கிரஸ் இல்லாமல் செய்ய வேண்டும் - ஏ.எல்.தவம்

SHARE

கேள்வி – பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நீங்கள் மௌனமாக இருப்பதான ஒரு தோற்றமிருக்கிறதே, அதற்கான காரணத்தை அறிய முடியுமா?
பதில் – (சிரித்துக் கொண்டே)அரசியல் பக்குவத்தை மௌனமென்று பொருள் கொள்ள வேண்டாம். குழப்பங்களில் மாட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருப்பது சிறந்தது எனக் கருதினேன். அதனால் அமைதியாக இருந்தேன் அவ்வளவு தான்.

கேள்வி – ஆனால், மக்கள் மத்தியில் உங்களின் கருத்துக்களுக்கு எப்போதும் பலமாக வரவேற்பு இருக்கிறதே

பதில் – உண்மைதான். என்னைப் பொறுத்தவரை எனது மௌனத்தின் அர்த்தத்தையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். சில நேரங்களில் வார்த்தைகளை விட மௌனம் அதிகம் அர்த்தமுடையது.

கேள்வி – இப்போதாவது அரசியல் பேசுவோமா?

பதில் – தாராளமாக. பேசவேண்டிய நேரகாலம் நெருங்கி விட்டதாகவே  எனக்கும் படுகிறது. பேசலாமே.

கேள்வி – உங்கள் ஊரிலிருந்தே தொடங்குவோம். கடந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களுக்கு அக்கரைப்பற்றில் பாரிய ஆதரவு வீழ்ச்சி கிடைக்கக் காரணமென்ன?

பதில் – கடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் அமைச்சருக்கு சுமார் ஆறாயிரம் வாக்குகளும், எங்களுக்கு சுமார் பதினோராயிரம் வாக்குகளும் அக்கரைப்பற்றில் அளிக்கப்பட்டிருந்தன. 

கடந்த காலங்களில் அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலை முன்கொண்டு செல்லப்பட்ட விதத்தைவிட, எங்களுடைய இணைவுக்குப் பின்னர் முன்கொண்டு செல்லப்படும் விதம் மாற்றமானது. அதனால், எங்களால் இவ்வாறு அவருடைய வாக்கு வங்கியில் பெரும் சரிவை ஏற்படுத்த முடிந்தது.

அவருடையசமூக விரோதச் செயற்பாடுகளையும், தனிமனித அரசியல் நிலைப்பாடுகளையும் மக்களுக்கு அக்குவேறு ஆணிவேறாக தெளிவுபடுத்தும் வேலையை ஆதாரங்களோடு தொடர்ச்சியாகச் செய்து வந்தோம். மக்கள் அவரை நன்றாக விளங்கிக்கொண்டார்கள். அதனால், அவர் தனது சொந்த ஊர் மக்களில் பெரும்பான்மையானவர்களினால் நிராகரிக்கப்பட்டு தோல்வியைத் தழுவினார்.

கேள்வி – இப்போது அவர் முஸ்லிம் காங்கிரஸில் இணையப்போவதாக கூறப்படுகிறதே, அது தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்?

பதில் – முஸ்லிம் காங்கிரஸுடன் கூட்டிணைந்து செயற்படுவதற்காக தூதுகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், எம்மைப் பொறுத்தவரைக்கும் செத்த பாம்புக்கு ஒக்சிஜன் கொடுக்கும் எந்தத் தேவையும் எமக்கில்லை. அது மட்டுமல்லாமல் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு மக்கள் வழங்கிய ஆணையைப் பெற்றுக்கொண்டு, அக்கட்சியை அழிப்பதற்கு செய்த விடயங்கள் எதனையும் இன்னும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மறக்கவில்லை.

கேள்வி – எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபையில் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் போட்டியிடவுள்ளதாக கூறப்படும் நிலையில் உங்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

பதில் – அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறேன். அப்படி அவர் களத்திற்கு வரவேண்டும். ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் அக்கரைப்பற்றில் அவரைத் தோற்கடித்ததைப் போன்று, இத்தேர்தலிலும் தோற்கடித்து இதற்குப் பின்னர் அரசியல் தொடர்பில் எந்த ஆசையுமில்லாமல் செய்கின்றசந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்.

கேள்வி – அண்மைக்காலமாக சேகு இஸ்ஸதீன் மிகக்காரமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கிறாரே அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில் – ‘களத்திலே நின்று கயிறு கட்டி இழுக்க முடியாமல் போன மரத்தை, மலையிலே இருந்து மயிர் கட்டி இழுத்துப் பார்க்கிறார்’. (சிரிக்கிறார்) அவருடைய அரசியல், வாராந்த சந்தையில் விற்கும் சீசன் உற்பத்திகள் மாதிரி. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு பொருள். 

இந்த சீசனில்அமைச்சர் றிஷாட் பதியுத்தீன். எங்கள் சேர் பற்றி எங்களுக்குத் தெரியாதா? இதனை தானே கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே,இது பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

கேள்வி – அண்மையில் தமிழ்க்கூட்டமைப்பு பற்றிக் கூறிய விடயங்கள் தொடர்பில் உங்கள் தலைவர் றஊப் ஹக்கீம் மீது பெரும் குற்றச் சாட்டுக்களை அவர்முன் வைத்திருகிறார். அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? 

பதில் – ஆரம்பத்தில் மர்ஹூம் அஷ்ரப்பை சரி கண்டார்; பின்னர் மறுத்துரைத்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் ஆரம்பத்தில் மகிந்தவை பிழை கண்டார்; பிறகு மகிந்தவுக்காக பிரச்சாரம் செய்தார். ஒரு கட்டத்தில் றஊப் ஹக்கீமைபுகழ்ந்து தள்ளினார்; மறுகணமேவசை பாடினார். இப்போது தமிழ் சமூக அரசியலுக்காகப் பேசுகிறார்; நாளை எதிர்த்து நிற்பார். இது அவரது வாடிக்கை. புதிதான ஒன்றல்ல.

இவர்தான் 1988 – 89 களில் தமிழ் சமூகத்திற்கு எதிராக முஸ்லிம் இளைஜர்களைத் தூண்டும் விதத்தில் செயற்பட்டார் என்பதும், காத்தான்குடி இரும்புத் தைக்கா அருகில் இது தொடர்பில் இவர் ஆற்றிய உரையும் இன்னும் எல்லோருக்கும் நினைவிருக்கும். அதேபோன்று,புலிகளால் முன்வைக்கப்பட்ட சுனாமிக்குப் பின்னரான முகாமைத்துவக் கட்டமைப்பை(PTOMS) இவர்தான் மிகமோசமாக விமர்சித்தார் என்பதும் நாடறிந்த விடயம்.இப்போதுமட்டும்ஏன் தமிழ் அக்கறை இவரில் தவள்கிறது என்பதை நாம் அறியாமலில்லை. தமிழர்களும் நன்கு அறிந்துதான் இருக்கிறார்கள்.

கேள்வி – எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அமைச்சர் ரிஷாட்டின் அணிக்கு சார்பாக சேகு இஸ்ஸடீன் அவர்கள் களமிறங்கினால்உங்கள் நிலைப்பாடு எப்படியிருக்கும்?

பதில் – அக்கரைப்பற்றில் கடந்தபொதுத் தேர்தல் வரை இருந்த மிகப்பெரும் அரசியல் அடக்கு முறைக்கு எதிராகப் போராடி, சுதந்திரம் பெற்றுக்கொடுத்திருக்கிறோம்.சேகு இஸ்ஸடீன் அவர்களால் முடியாததை இறைவனின் உதவியால் நாங்கள் செய்து முடித்திருக்கிறோம்.அவ்வாறு போராடுவதில் பங்காளராக இருக்க வேண்டிய அவர் பார்வையாளராக இருந்தார்.

இருப்பினும், இன்றுஅந்த சுதந்திரத்தை அவரும் அனுபவிக்க சந்தர்ப்பம் கொடுப்போம். தேர்தல் என்று வந்தால், யாராக இருந்தாலும் களத்தில் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். அபிவிருத்தி மாயை காட்டிக்கொண்டிருந்த ஒரு அமைச்சரவை அமைச்சரைத் தோற்கடித்த மண் அக்கரைப்பற்று மண். இவர் தொடர்பிலும் நன்கு அறிந்து வைத்திருக்கிறது என்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார்.

கேள்வி – உங்களது கட்சியால் ஏன் இன்னும் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியாமலிருக்கிறது?

பதில் – கடந்த பொதுத் தேர்தலில் எதிர்பார்க்காத வண்ணம் திருகோணமலை மாவட்டத்தில், ஏலவே இருந்த பாராளுமன்ற உறுப்பினரை இழந்ததனால் ஏற்பட்டகள நிலவரமே,தற்கான முக்கிய காரணம். 

இன்றுள்ள தேர்தல் முறையினால் ஏற்படும் பிரதிகூலத்தை அங்கு நாம் சந்தித்திருக்கிறோம். அதனால், போதிய முஸ்லிம் வாக்குகள் அளிக்கப்பட்ட போதும்,தாம் இழந்திருக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தேசியப்பட்டியலூடான நிவர்த்திக்குமாறு அங்கிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல வன்னி மக்களும்தாம் இழந்திருக்கும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தேசியப்பட்டியலூடான நிவர்த்திக்குமாறு கோருகின்றனர். மறுபுறம், மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்குடாமற்றும்காத்தான்குடி போன்ற ஊர்களும், கம்பஹா மாவட்ட மக்களும் தமக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இவ்வாறு கோரப்படுவதில் நியாயங்கள் இல்லாமலுமில்லை.

ஆனால், இருப்பதோ இரண்டே இரண்டு தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் மட்டுமே. இதனால், யார் யாருக்கு வழங்குவது. என்ன அடிப்படையில் வழங்குவது என்பதைத் தீர்மானிப்பதில் தர்மசங்கடங்கள்உள்ளன. 

இதனால்,ஏலவே தலைவரால் தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளைக் கூட உடனடியாகப் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே பக்குவமாக இவ்விடயத்தைக்கையாளும் பொருட்டு தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இரு தேசியப்பட்டியல் உறுப்பினத்துவமும்மிக விரைவில் வழங்கப்படும்.

கேள்வி – அக்கரைப்பற்றிற்குகிழக்கு மாகாண சுகாதார அமைச்சும், அதேபோல அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் உறுப்பினரும் இதுவரைக்கும்  வழங்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? 

பதில் – இதற்கான பதில் இதற்கு முந்திய கேள்விக்கான பதிலில் உள்ளது.தேர்தல் காலத்தில் வாக்களித்த இந்த இரண்டு விடயங்களையும் நிறைவேற்ற வேண்டுமென்பதில் கட்சியும் தலைவரும் கவனமாக இருக்கின்றனர். சற்றுக் கால தாமதம் தேவைப்படுகிறது.

கேள்வி – ஆனால், உங்களது கட்சியின் செயலாளர் நாயகம் தனக்கு தேசியப்பட்டியல் கேட்பதால் தான் இவ்வளவு காலதாமதம்ஏற்படுவதாகக் கூறப்படுகிறதே. இதற்கான உங்கள் பதில் என்ன? 

பதில் – ஆம், அவர் தனக்கும்தேசியப்பட்டியல் உறுப்புரிமை வேண்டுமென்று கேட்கிறார். கேட்பதற்கு அவருக்குச் சுதந்திரமும் உள்ளது. அவருக்கு மட்டுமல்ல கட்சியிலுள்ள எல்லோருக்கும் அந்த உரிமையும் இருக்கிறது. ஆனால், நியாயம் உள்ளதா என்பதில் தான் கேள்வி எழுகின்றது.

ஏற்கனவே, தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை இழந்து நிற்கும் மாவட்டங்கள் ஒருபுறம், தங்களது பிரதேசங்களில் கட்சிக்குள்ள  சவால்களை முகம் கொடுக்க பாராளுமன்ற உறுப்பினரின் தேவையை வேண்டி நிற்கும் ஊர்கள் ஒரு பக்கம், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இந்த முறை எதிர்பார்ப்பில் இருக்கும் ஊர்கள் மறுபக்கம் என்ற நிலை இருக்கும் போது, செயலாளர் நாயகத்தின் கோரிக்கையை முன்னிலைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன.

தனிமனிதனை திருப்திப்படுத்துவதா? அல்லது மக்களைத் திருப்திப்படுத்துவதா? என்றவிமர்சனத்திற்கு செயலாளர் நாயகமும் சேர்ந்து மனச்சாட்சியுடனான தீர்மானத்தை எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல்சிறிது காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து தான் எதனைச் சாதிக்கப்போகிறேன் என்றுசிந்தித்துப் பார்க்கவேண்டும். அவ்வாறு அவர் சிந்தித்து விட்டுக்கொடுப்போடு நடந்து கொள்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கேள்வி – அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாது விட்டால் கட்சியிலிருந்து அவர் பிளவுபடலாம் என்று கூறப்படுகிறதே. அது தொடர்பில் என்ன கூறுகிறீர்கள்?

பதில் – ஏலவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி முபீனுக்கு வழங்கப்படுவதாக இருந்த தேசியப்பட்டியல் பிரதிநித்துவத்தை மக்களின் விருப்பத்திற்கு மாறாக, தவிசாளர் பசீர் சேகு தாவூத்துக்கு வழங்கியதால் ஏற்பட்ட விபரீத விளைவுகளால் தான், மட்டக்களப்பில் இன்று கட்சி அழிவடையும் நிலைக்கு வந்திருக்கிறது என்கிற அனுபவரீதியிலான யதார்த்தத்தை நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.
அதே நிலவரம்தான் தற்போது அம்பாறை மாவட்டத்திலும் வந்திருக்கிறது. தேசியப்பட்டியல் பிரதிநித்துவம் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு தொடர்பில் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், அக்கரைப்பற்று, இறக்காமம், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் உள்ள சுமார்85,000 முஸ்லிம் வாக்காளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக கட்சி தீர்மானமெடுத்து, செயலாளர் நாயகத்திற்கு தேசியப்பட்டியல் கொடுத்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸிற்குஏற்பட்டுள்ள நிலைதான், அம்பாறை மாவட்டத்திலும் ஏற்படும்.

இந்த இடத்தில் ஒன்றை நான் கேட்க விரும்புகிறேன். தனிமனிதனுடைய பிரிவு அதிகம் கட்சியை பாதிக்குமா? அல்லது 85,000 வாக்காளர்களைக் கொண்ட பிரதேசங்களின் அதிருப்தி அதிகம் கட்சியைப் பாதிக்குமா? பெரும் தொகையான வாக்காளர்களைக் கொண்ட பிரதேசங்களின் அதிருப்திதான்அதிகம் கட்சியைப் பாதிக்குமென்பதை அனைவரும் அறிவார்கள். எனவே, இந்த விடயத்தில் செயலாளர் நாயகம் அவர்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட முன்வரவேண்டும்.

கேள்வி – இவ்வாறான விடயங்களையும் மீறி அவருக்கு தேசியப்பட்டியல் பிரநிதித்துவம் வழங்கப்பட்டால் உடனடி விளைவுகள் எப்படி இருக்கும்?

பதில் – முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை வெற்றி பெற்று வந்த அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேச சபைகளையும், தற்போதுவென்றெடுப்பற்குச் சாத்தியமுள்ளஅக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையையும், வென்றெடுப்பதற்கு முயற்சிக்கக் கூடிய சம்மாந்துறை பிரதேச சபையையும் எதிர்வரும்உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் இழப்பதோடு, கல்முனை மாநகர சபை மற்றும் நிந்தவூர் பிரதேச சபைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படும்.

அதற்கடுத்ததாக நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸிற்குமாற்றாகவுள்ள முஸ்லிம் அரசியல் சக்திகள், முஸ்லிம் காங்கிரஸ் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கைக்குச் சமனான அல்லது அதிகமான ஆசனங்களைப் பெறும் சாத்தியமேற்படும். அதனூடாக கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாற்று முஸ்லிம் அணிகள் உருவெடுக்கும் அபாயமுள்ளது.

அத்தோடு, நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தான்,அம்பாறை மாவட்டம் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்கின்ற நிலையில் இருந்து நடந்த இறுதித்தேர்தலாக அமையும்.மாற்று முஸ்லிம்அணிகள் சர்வசாதாரணமாக தமது காலை ஊன்றிக்கொள்ளும் நிலவரத்தை முஸ்லிம் காங்கிரஸ் தானாக உருவாக்கிக் கொடுத்ததான துர்பாக்கிய நிலை ஏற்படும். 

இத்தனை விளைவுகளையும் செயலாளர் நாயகத்திற்கு தேசியப்பட்டியல் வழங்குவதனூடாக உடனடியாகவும், சிறிது தாமதமாகவும் முஸ்லிம் காங்கிரஸ் சந்திக்க வேண்டிவரும்.
 (நன்றி SLMC வெளிச்சம்)
SHARE

Author: verified_user

0 Comments: