20 Oct 2015

கலப்பு நீதிமன்ற விசாரணைக்காலம் 1985 ஆக பின் நகர்த்தப்பட வேண்டும்-மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம்

SHARE
இன்று தமிழ் அரசியல் கைதிகளை  விடுதலை செய்ய வேண்டுமென உங்களோடு சேர்ந்து முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை வைப்பது போல, முஸ்லிம்களுக்கும் யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவற்றிற்கும் நியாயங்களைப் பெற்றுக்கொடுக்கும் வண்ணம், யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கும் கலப்பு நீதிமன்ற (ஹைப்ரிட் கோர்ட் ) விசாரணைகளின் காலத்தை பின்னோக்கி நகர்த்தி, 1985 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்க்கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காகப் பேச முன்வர வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் தமிழ்க்கூட்டமைப்பினர் கொண்டு வந்த தனிநபர் பிரேரணை மீது உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்
இந்த நாட்டில் இன்று யுத்தம் ஒய்வு பெற்றிருக்கிறது. இன நல்லிணக்கத்திற்கான தேவை உணரப்படுகிறது. அவ்வாறான இன நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால், நாட்டிலுள்ள யுத்தத்தின் வடுக்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும். அப்படியான வடுக்களில் ஒன்றுதான் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமுமாகும். எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமான ஒரு விடயமாகும். சற்று பிந்தியதாக தமிழ்க்கூட்டமைப்பின் கவனம் இவ்விடயத்தில் திரும்பியிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டும்.

அந்த அடிப்படையில், குற்றவியல் சட்ட ஏற்பாடுகளின் கீழ் குற்றவாளிகள் என்று நிருபணமாக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட தமிழ்க் கைதிகள் தவிர்த்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென முஸ்லிம்கள் சார்பிலும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இன்று தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென உங்களோடு சேர்ந்து முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை வைப்பது போல, முஸ்லிம்களுக்கும் யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களையும் விசாரணைக்கு உட்படுத்தி, அவற்றிற்கும் நியாயங்களைப் பெற்றுக்கொடுக்கும் வண்ணம், யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரிக்கும் கலப்பு நீதிமன்ற விசாரணைகளின் காலத்தை பின்னோக்கி நகர்த்தி, 1985 ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்க்கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காகப் பேச முன்வர வேண்டும்.
இவ்வாறு முஸ்லிம்களினதும் ஆதங்கங்களையும் உள்வாங்கி அவர்களின் இழப்புக்களுக்கும் பொருத்தமான இழப்பீட்டு நிவாரணங்களை வழங்குவதநூடாகத்தான் உண்மையான இன நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியுமென்கின்ற யதார்த்தத்தினை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். யுத்த குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் 2001 என்கின்ற காலத்தை பின்னோக்கி 1985 ஆக மாற்றிக்கொள்வதற்கு இங்கிருக்கும் ஆளுங்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வேண்டிக்கொள்கிறேன் எனவும் அவர் அங்கு கூறினார்.
SHARE

Author: verified_user

0 Comments: