தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை தமிழ் தேசியத்துக்கு கிடைத்துள்ள ஓர் அரிய சந்தர்ப்பமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைமை என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பலமிக்கதொரு பதவியாகும். இன்று அப்பதவிக்கு மிகவும் தகுதியுடைய, ஆற்றல் ஆளுமை, அனுபவ முதிர்ச்சிமிக்க ஒருவர், அதுவும் தமிழ் அரசியல் தலைமை நியமிக்கப்பட்டிருப்பதானது நல்லாட்சிக்கு அச்சாணியாக அமைந்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த வாய்ப்பு பெரிதும் உதவும் என முழு நாடும் சர்வதேச சமூகங்களும் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தை மிகவும் சாதுர்யமாக பயன்படுத்தி சிறுபான்மையினரின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அடைந்து கொள்வதற்கு இரா.சம்பந்தன் தன்னை அர்ப்பணித்து செயற்படுவார் என நாம் திடமாக நம்புகின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment