ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியலில் ஒன்றை முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சிக்காக உழைத்த மூத்த உலமாக்களுக்கு வருடத்தில் ஒருவர் என்ற வகையில் பிரித்து வழங்குவதே மறைந்த தலைவருக்கு செய்யும் கௌரவமாகும் என உலமா கட்சித் தலைவர் கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுப்பதில் பாரிய பங்கு வகித்த மூத்த போராளிகள் மற்றும் உலமாக்கள் அக்கட்சியினால் சரியாக கௌரவப்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் பலருக்கும் உண்டு.
ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரம் கிழக்கில் காலூன்றியிருந்த வேளையில் தலைவர் அஷ்ரபுடன் இணைந்த பலர் இந்த சமூகத்துக்கான கட்சி தேவை என்பதற்காக பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். இதில் கணிசமான அளவு உலமாக்கள் மிகப்பெரிய பங்கை வழங்கியுள்ளனர்.
எதவித சுயநலனோ எதிர்பார்ப்போ இன்றி பாரிய உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸூக்காக உழைத்துள்ளார்கள்.
இதில் நாம் அறிந்த வரை நம்முடன் சம்மாந்துறை புகாரி மௌலவி,கொழும்பு அப்துல் மஜீத் ஆலிம், ஷேக் மசீஹுத்தீன் இனாமுள்ளா போன்றோர் கட்சிக்காக அரும்பாடுபட்டவர்கள் மட்டுமல்ல அக்கட்சியை தூக்கி நிறுத்தியவர்களில் முக்கியமானவர்களுமாவர்.
இவர்களது பங்களிப்பை அவ்வளவு எளிதாக இந்த சமூகமும் முஸ்லிம் காங்கிரஸூம் மறந்து விட முடியாது. எனினும் இத்தகைய உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் சரியாக கௌரவித்துள்ளதா என்பதை அக்கட்சியினர் அவசியம் சிந்திக்க வேண்டும். ஆகவே, முஸ்லிம் காங்கிரஸூக்காக 1990ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே பாடுபட்ட மௌலவிமார் இனங்காணப்பட்டு அவர்களுக்கு மு.கா.வின் தேசிய பட்டியலில் ஒன்றை சுழற்சி முறையில் வழங்க இன்றைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.
தலைவர் அஷ்ரப் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் அவ்வாறே செய்திருப்பார். இவ்வாறு உலமாக்களுக்கு வருடத்துக்கொருவர் என்ற வகையில் தேசிய பட்டியலை வழங்குவது தலைவர் அஷ்ரபுக்கு செய்யும் கௌரவமாகும் என்றார்.
0 Comments:
Post a Comment