1 Sept 2015

உள்ளக பொறி முறைக்கு பின்னால் தலைவர்கள் சென்றாலும் தமிழர்கள் செல்லமாட்டார்கள்! பிரசன்னா இந்திரகுமார்

SHARE

உள்ளக விசாரணையினை ஏற்று தமிழ் தலைமைகள் அமெரிக்காவின் பின்னால் சென்றாலும் தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள் என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக்கழகம் 44வது ஆண்டு நிறைவினையொட்டி நடாத்திய மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் மக்கள் என்றைக்கும் சர்வதேச விசாரணையை மட்டுமே கோரி நிற்கின்றனர். உள்ளக விசாரணையில் தமிழ் மக்களுக்கு என்றும் நம்பிக்கையில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, கிழக்கு பல்கலைக்கழக படுகொலை உட்பட பல படுகொலைகளுக்கு எங்களுக்கு இதுவரையில் நீதிகிடைக்கவில்லை.
காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது எமக்கு எந்தளவுக்கு நீதி கிடைத்துள்ளது என்பதை நாங்கள் பார்க்கவேண்டும்.
உள்ளக விசாரணையில் தமிழ் மக்களுக்கு என்றும் நம்பிக்கையில்லை. உள்ளக விசாரணையினை ஏற்று தமிழ் தலைமைகள் அமெரிக்காவின் பின்னால் சென்றாலும் தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள்.
கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு என அமெரிக்காவினால் ஒதுக்கப்பட்ட நிதியானது முற்று முழுதாக முஸ்லிம் பாடசாலைகளுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு தமிழ் பாடசாலையாக கல்முனை வெஸ்லி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் 25 வீதத்துக்கும் அதிகமான முஸ்லிம் மாணவர்கள் கற்பதன் காரணமாகவே அதற்கும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முழுப்பொறுப்பினையும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சரே ஏற்கவேண்டும். அவர் தமது சமூகம் சார்ந்த அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ந்தும் பாராமுகமாகவே செயற்பட்டுவருவதாக பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர்.
முஸ்லிம் காங்கிரசுடன் பெரும் இக்கட்டான நிலையில் கூட்டமைப்பு ஆட்சியமைத்து பெற்றுக்கொண்ட அமைச்சு பதவியினை உரிய முறையில் அவர் பயன்படுத்தவில்லையென தமிழ் மக்கள் கவலை தெரிவித்துவருகின்றனர்.
மூன்று இனங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தமது சமூகம் சார்ந்து மட்டும் முதலமைச்சர் ஒதுக்கீடு செய்தது கண்டனத்துக்குரியதாகும்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தலைமையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட சம்பூர் பகுதியில் உள்ள பாடசாலைக்காவது இந்த நிதியில் ஒதுக்கீடு செய்திருக்கவில்லையென்பது கவலையான விடயமாகவே பார்க்கப்படுகின்றது.
இன்று இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும் அந்த நல்லாட்சியில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
அண்மையில் விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டது. 72வீதமான தமிழ் மக்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 75 சிங்களவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவா நல்லாட்சி என மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
20வருடத்துக்கு முன்பாக இந்த நியமனம் வழங்கப்படவிருந்த நிலையில் யுத்தம் நடைபெற்ற காரணத்தினால் அன்றைய பேரினவாத அரசு அதனை தமிழ் மக்களுக்கு வழங்கவில்லை. ஆனால் தற்போது அது வழங்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
2015 ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டின் தலைவிதியை ரணில், சம்பந்தன், சந்திரிகா ஒன்றிணைந்தே மாற்றியமைத்தனர். புதிய மாற்றத்தினை கொண்டுவந்து ரணில் பிரதமராக வருவதற்கு உதவியது தமிழ் மக்களாகும்.
ஆனால் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலை தொடர்ந்து புதிய ஆட்சி ஏற்படுத்தப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதுவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. இது அவரின் தமிழர்களை புறந்தள்ளியுள்ளார் என்பதையே காட்டுகின்றது.
இந்த நாட்டில் இரண்டு பெரும்பான்மை கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கவுள்ள நிலையில் அதன் மூலம் சிறுபான்மை சமூகத்துக்கு எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: