16 Sept 2015

முஸ்லிம்களின் இருப்புக்கு போராட்டம் அச்சுறுத்தலாக மாறியது

SHARE

நாட்டில் புரையோடிப்போயிருந்த இனப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அன்றிருந்த தமிழ் அரசியல் தலைமைகளினால் முன்னெடுக்கப்பட்ட அறவழி அகிம்சை போராட்டம் தோல்வி அடைந்து ஆயுதப் போராட்டமாக மாறியது. இப்போராட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் மக்களின் உயிர், உடைமைகளை அழிவுக்குட்படுத்தியதுடன்,  அவர்களின் இருப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியதாக கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையின் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்; ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் 15ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு ஞாபகார்த்த உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இந்தத்  தாக்கத்தை நேரடியாக அனுபவித்தவர் என்ற ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கான உரிமைகளைப் பெறவும் அவர்களின் இருப்பை பாதுகாக்கவும் தனித்துவமான ஓர் அரசியல் பலம் தேவை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை தலைவர் அஷ்ரப் தோற்றுவித்தார்' என்றார். 

'இலங்கை முஸ்லிம்களுக்கு தனித்துவமான அரசியல் பாதையை வகுத்து அப்பாதையில் மக்களை ஒரு குடையின் கீழ் அணி திரட்டி புதுமை படைத்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார். மேலும், ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அரசியல் தலைமையின் ஆமையிலும் ஆற்றலிலுமே தங்கியுள்ளது. அத்தகைய ஆளுமையும் ஆற்றலும் அரசியல் தீர்க்க தரிசனமுள்ள ஒரு தலைவராக அஷ்ரப் திகழ்ந்தார்' எனவும் அவர் தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: