5 Sept 2015

கிழக்கு மாகாணசபை இனவிரோத செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுவருகின்றது: பொன்.செல்வராசா

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிக பாடசாலைகள் இருக்கும்போது அமெரிக்க உதவியுடன் அபிவிருத்திசெய்ய முஸ்லிம் பாடசாலைகள் அதிகளவில் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் நிதியொதுக்கீடும் அவற்றுக்கு அதிகளவில் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு கிழக்கு மாகாணசபையின் இனவிரோத செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு அமைச்சர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் வகையில் செயற்படவில்லையெனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணசபையில் சர்ச்சையொன்று ஏற்பட்டுள்ளதை அனைவரும் அறிவார்கள். அமெரிக்க அரசாங்கம் பாடசாலை அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் இந்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இனப்பாடசாலைகளுக்கிடையில் முறுகல் நிலையினை ஏற்படுத்துமளவுக்கு கிழக்கு மாகாண அரசாங்கம் செயற்பட்டுவருவதை காணமுடிகின்றது.
இது தொடர்பில் அரசியல்வாதிகள் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகின்றனரே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கையெதனையும் எடுக்கவில்லை.எட்டுப்பாடசாலைகள் அமெரிக்காவின் உதவித்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.இவற்றில் ஏழு முஸ்லிம் பாடசாலைகளும் ஒரு தமிழ் பாடசாலையும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
நான் இனவாதம் பேசவரவில்லை.கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் சற்று தமிழர்கள் அதிகமாக வாழுகின்றனர். விகிதாசார அடிப்படையில் எட்டுப்பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டிருந்தால் நான்கு பாடசாலைகளாக பங்கிட்டு வழங்கியிருக்கவேண்டும்.ஆனால் அது இங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.
எட்டுப்பாடசாலைகளுக்கு அமெரிக்க உதவித்திட்டத்தின் ஒதுக்கப்பட்ட நிதி 430.02 மில்லியன் ரூபா மனிதாபிமான ரீதியில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஒதுக்கப்பட்ட பணமாகும்.
இந்த தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையான வெஸ்லி கல்லூரிக்கு 32மில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.முஸ்லிம் பாடசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கப்பட்ட நிலையில் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் பாடசாலைக்கு மிகவும் குறைந்த நிதியே ஒதுக்கப்பட்டமையானது வேதனையான விடயமாகும்.
இதேபோன்றுதான் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை அரசாங்கம் அமைக்கும்போது பட்டிருப்பு மற்றும் மட்டக்களப்பு தொகுதிக்கான தமிழ் பகுதிகளுக்கு வழங்கப்பட்ட ஆய்வுகூடங்கள் முஸ்லிம் பாடசாலைகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் அன்றைய கல்வி அமைச்சரை தொடர்புகொண்டு அவற்றினை தடுத்து நிறுத்தினேன்.
ஒவ்வொரு தடவையும் கிழக்கு மாகாணசபையில் தமிழ் மக்கள் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.
இன்று கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாட்டுடன் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரண்டு அமைச்சர்களுக்கு அமைச்சரவையில் உள்ளனர்.
இந்த பாடசாலை தெரிவுதொடர்பில் அமைச்சரவையில் உள்ள கல்வி அமைச்சருக்கோ விவசாய அமைச்சருக்கோ தெரியாமல் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுகின்றது.இவ்வாறான தெரிவுகளை அமைச்சரவையே செய்கின்றது. அமைச்சர்களாக இருந்துகொண்டு இது தெரியாது என்று கூறினால் அது ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும். இவர்கள் தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருந்தார்களா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
எத்தனை அரசியல்வாதிகள் ஊடகங்களில் கருத்துக்களை கூறினாலும் இந்த பிரச்சினையை தீர்க்கவேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாணசபையில் உள்ள இரண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அமைச்சர்களையே சாரும். அதிலும் கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி இதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கையெடுக்க வேண்டும். இவற்றினை செய்யாதுபோனால் அது தமிழ் மக்களுக்கு ஆற்றும் கடமையல்ல என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
கடந்த கால யுத்த சூழ்நிலையினால் அழிவுகளை எதிர்கொண்ட பல பாடசாலைகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலே அவ்வாறான பாடசாலைகள் இருக்கும்போது முஸ்லிம் பாடசாலைகள் அதிகளவில் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் நிதியொதுக்கீடும் அவற்றுக்கு அதிகளவில் செய்யப்பட்டுள்ளது.
இது கிழக்கு மாகாணசபையின் ஒரு இனவிரோத செயற்பாடாகவேபார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நிகழக்கூடாது. சிலவேளைகளில் கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம்.அவற்றினை நாங்கள் கருத்தில்கொள்ளமுடியாது.
அந்த அரசாங்கத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்குவந்து ஆட்சியில் பங்குகொள்ளாத காலமாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு அமைச்சர்கள் பங்குகொண்டுள்ள அரசாங்கத்தில் இவ்வாறான நிலைமைகள் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றால் இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
கிழக்கு மாகாண அமைச்சரவையில் பங்குகொண்டுள்ள கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி அவர்களும் விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களும் இவற்றினை கருத்தில்கொள்ளவேண்டும். இவற்றினை செய்யக்கூடியர்கள் இவர்கள் மட்டுமே.இவர்கள் அதனைச்செய்யாவிட்டால் அவர்கள் அமைச்சரவையில் இருப்பதில் எந்த பலனும் இல்லை
SHARE

Author: verified_user

0 Comments: