சிரியாவில் உயிரிழந்த சிறு குழுந்தையின் புகைப்படமும் வியட்நாம் போரின்போது வெளிவந்த சிறுமியின் புகைப்படமும் உலகையே உலுக்கியபோது, இலங்கையில் சிதறிய தமிழ் குழந்தைகளின் புகைப்படங்கள் மட்டும் ஏன் உலகிற்கு தெரியவில்லை என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் கவீந்திரன் கேள்வி எழுப்பினார்.
நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற கட்டடத்தில் மன்றத்தலைவர் வே.சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற பாராட்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
உள்ளகபொறிமுறை விசாரணை மூலம் தமிழ் மக்களுக்கு நேர்மையான நியாயமான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதனாலேயே நாம் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்றோம்.
அவ்வாறான விசாரணை மூலம் தமிழ் மக்கள் இதுவரைகாலமும் இழந்த இழப்புக்களையும், உரிமையினையும் பெற்றுக்கொடுக்கும் அதேவேளை, அப்பாவி உயிர்களை பறித்தவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்து ஒரே சமயத்தில் இரண்டு விடயங்களுக்கு தீர்வு காண முயற்சிப்போம் என்றார்.
வடகிழக்கில் 16 ஆசனங்களை பெற்றதன் மூலம் தமிழர்களின் ஏகபிரதிநிதி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என தேசத்திற்கும் சர்வதேசத்திற்கும் மீண்டுமொருமுறை மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எமது தலைவர் இரா சம்மந்தன் ஐயா தீர்க்கதரிசனம் மிக்கவர். எதிர்காலத்தில் நடக்கப்போவதை நிகழ்காலத்தில் சொல்ல கூடியவர்.
அவரது தலைமையின் கீழ் எதிர்வரும் ஐந்து வருடத்தினுள் தமிழர்களின் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு எட்டப்படும் என்பதில் மாற்றமில்லை எனவும் அதில் மக்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை எனவும் கூறினார்.
0 Comments:
Post a Comment