6 Sept 2015

இலங்கையர்களை தேடிக்கொண்டு இருக்கிறேன் என்கிறார் துரைராசசிங்கம்

SHARE
இந்த நாட்டில் சிங்களவர்கள் இருக்கின்றார்கள், தமிழர்கள் இருக்கின்றார்கள், முஸ்லீம்கள் இருக்கின்றார்கள் ஆனால் இங்கு இலங்கையர்கள் என்று யாராவது இருக்கின்றார்களா என்று நான் தேடிப்பார்க்கின்றேன் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
அம்பாறையில் இடம்பெற்ற மாவட்டத்தின் சிறந்த விவசாயிகளுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
கிழக்குலகின் நெற் களஞ்சியம் என்கின்ற பெயரை எமது நாடு பெற்றிருக்கின்றது.
நாம் இயற்கையோடு ஒட்டி வாழ்கின்ற போது ஏராளமான வைத்தியசாலைகளை இல்லாமல் செய்து விடலாம். இத்தகைய முக்கியத்துவம் மிக்க இந்த விவசாயத்தினை தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் மக்கள் மத்தியில் செயற்படச் செய்ய வேண்டிய பொறுப்பு கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் அமைச்சராகிய எனக்கும் என்னுடைய அமைச்சின் அதிகாரிகளுக்கும் உண்டு.
எமக்கு பகிரப்படாத அதிகாரங்கள் இல்லாத போதிலும் கிழக்கு மாகாணம் தனக்கு இருக்கின்ற வரையரைக்குள்ளே அதை மிஞ்சியதாக தன்னுடைய சேவைகளைச் செய்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் எமது அதிகாரிகளும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
விவசாயிகள் இங்கு பல பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள். அதிலும் தங்க வேலாயுதபுரத்தைச் சேர்ந்த விவசாய ஒருவர் அங்கு வெட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற 35 கிணறுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பெரிய கதையுண்டு. இது எமக்கு முன்பு இருந்த நிர்வாகத்தினர் செய்த திருவிளையாடல்களில் ஒன்று. அவர்கள் அதற்குரிய பணங்களையெல்லாம் எங்கோ கொண்டு சென்று விட்டார்கள். எமது மக்களுக்கு மிஞ்சியது இந்த மடுக்கள் மட்டும் தான். இந்த மடுக்களை கிணறாக மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு.
நாம் இந்த நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதி மாற்றத்தின் பின்னர் தான் இந்த ஆட்சி பொறுப்பைப் பெற்றோம். அதிலும் அமைச்சுப் பொறுப்பை ஏற்றது தாமதமாகவே அதாவது நிதி ஒதுக்கிடுகள் எல்லாம் பங்கீடு செய்யப்பட்டதன் பின்னர் தான் இந்தப் பொறுப்புகள் எம்மிடம் வந்தன. இருப்பினும் எதிர்வரும் காலங்களில் இதனை நாம் எவ்வாறாயினும் மேற்கொள்வோம்.
எமது நாட்டில் தற்போது ஓர் அரசியல் சூழல் ஓய்ந்து அனைவரும் சுவாசிக்கக் கூடிய வகையில் ஒரு மெல்லிய காற்று வீச ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுற்ற நிலையில் தற்போது ஒரு புதிய அரசாங்கத்தில் நாம் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம்.
அன்றைய அரச காலத்தில் ஆண்ட மன்னர்கள் தனது மக்களை அந்நியப்படுத்தாமல் ஆண்டு வந்தார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்த்து அத்தகையதொரு அந்நியப்படாத எல்லோருக்கும் ஏற்ற ஒரு சிறந்த நாட்டுக்கான அடிச்சுவட்டை இட வேண்டும் என்கின்ற அந்த விடயத்தில் நாம் ஒருமித்து நிற்க வேண்டும்.
இந்த நாட்டில் வீரப் பிரதாபங்கள் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு ஒரு தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான ஆணையை மக்கள் தற்போது வழங்கியிருக்கின்றார்கள். அங்கும் கூட இன்னும் ஒரு நிலைப்பாடு வராத நிலையில் தான் இருக்கின்றது. இந்த நாடு இருந்த வந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.
இந்த நாட்டில் சிங்களவர்கள் இருக்கின்றார்கள், தமிழர்கள் இருக்கின்றார்கள், முஸ்லீம்கள் இருக்கின்றார்கள் ஆனால் இங்கு இலங்கையர்கள் என்று யாராவது இருக்கின்றார்களா என்று நான் தேடிப்பார்க்கின்றேன். இந்த நாட்டில் இலங்கையர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது தான் நம்மிடைய உள்ள கேள்வி.
கழிந்தன கழிந்தனவாக இருக்கட்டும் இனிவருகின்ற நாட்களிலே நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்ற எண்ணம் கொண்டு செயற்பட வேண்டும். கடந்த தேசிய தினத்தில் ஜனாதிபதி அவர்கள் முன்வைத்த கருத்து என்னவென்றால் இது பன்மைத்துவம் மிக்க நாடு. இதனை அங்கீகரித்து அதற்கேற்ற விதத்தில் அரச இயந்திரம் செயற்படத் தொடங்கினால் மட்டும் தான் இந்த நாட்டில் உள்ள சகலரும் நிம்மதியாக வாழ முடியும் என்ற செய்தியைத் தெரிவித்தார்.
அந்த நிகழ்விற்கு எமது தலைவர் மிகக் கூடுதலான விமர்சனங்களுக்கு மத்தியிலும் சென்றிருந்தார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ்கின்ற அனைத்து மக்களும் சம உரிமையோடு வாழக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாக வேண்டும் அதற்கு நாம் எப்போதும் ஆயத்தமாக இருக்கின்றோம் என்பதற்கு அடையாளமாகவே அவர் அங்கு சென்றார்.
அண்மையில் சம்பூர் பிரதேசத்தில் எமது மக்களின் நிலங்கள் இராணுவத்தால் கபளீகரம் செய்யப்பட்டவற்றை விடுவித்து அந்த நிலங்களையும் அதன் உறுதிகளையும் எமது மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் வந்திருந்தார்.
அங்கு அவர் ஒரு நாடு அந்த ஒரு நாட்டுக்குள்ளே சமவுரிமையுள்ள மக்கள் என்கின்ற விடயத்தை அவரும் உச்சரித்துச் சென்றார். இது போன்று நல்ல விடயங்களும் நடக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று அவர் தெரிவித்தர்.
SHARE

Author: verified_user

0 Comments: