23 Sept 2015

புதிய கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தால் இயற்கை சமநிலை குழம்பும் - ரொபின் எம்.பி ஜனாதிபதிக்கு கடிதம்

SHARE
அம்பாறை மாவட்டம் கல்முனையில் 85வீதமாக வாழும் தமிழர்களின் பாரம்பரிய பூர்வீகத்தை கேள்விக்குள்ளாக்கும் கல்முனைநகர புதிய அபிவிருத்தித்திட்டத்தை அம்பாறைமாவட்ட தமிழர்களாகிய நாம் ஒட்டுமொத்தமாக எதிர்க்கின்றோம். எனவே இது விடயத்தில் தலையிட்டு நீதி வழங்கவேண்டுமென்று வேண்டுகின்றேன்.
இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்(ரொபின்) நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவிற்கும் பிரதமமந்திரி ரணில் விக்கரமசிங்கவிற்கும் எதிர்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுக்கும் விரிவான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

உத்தேச புதிய கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் முன்னர் இருதடவைகளில் கொண்டுவரமுற்பட்டபோது தமிழர்கள் நிராகரித்திருந்தனர். அதனால் அன்று அது கைவிடப்பட்டது. தற்சமயம் அத்திட்டம் வேறொரு உள்நோக்கத்துடன் புதுவடிவம் பெற்று வரமுயற்சிக்கின்றது.

எனவே இத்திட்டத்தை முற்றாக நிராகரிக்கின்றோம், எதிர்க்கின்றோம்.

தற்போது அவசரஅவசரமாக தமிழ்மக்களின் சம்மதமில்லாமல் ஒருதலைப்பட்சமாக முன்னெடுக்கப்படவிருக்கும் இப்புதிய நகரஅபிவிருத்தித் திட்டத்தால் கல்முனையில் தமிழர்களின் பூர்வீக காணிகளை சுவீகரித்து காணிஉரிமத்தை இல்லாதொழிப்பது இயற்கையான வெள்ளவடிச்சல் நிலையை பாதிப்புக்குட்படுத்தி வெள்ளத்தை ஊருக்குள் வரவழைத்தல் போன்ற பாரிய பாதிப்பு எதிர்நோக்கப்படும்.

கல்முனையில் 85வீதம் தமிழ்மக்களே மிகஅதிகமாக வாழ்ந்துவருகின்றனர். இதனை திட்டமிட்டு குறைக்குமுகமாக இன்றைய புதிய கல்முனை நகர அபிவிருத்தித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்திற்கு 800ஏக்கர் சுவீகரிக்கப்படவுள்ளது.

அதில் அரைவாசிக்கும் மேற்பட்ட காணிகள் தமிழர்களின் பூர்வீக காணிகளாகும். தமிழர்களின் காணி உரிமத்தை அடியோடு இல்லாதொழித்து இத்திட்டத்திற்கு அங்கு வாழும் பெரும்பான்மை மக்களான தமிழ்மக்களின் பிரதிநிதிகளின் அபிப்பிராயம் பெறப்படவில்லை.

எனவே இத்திட்டம் அமுல்படுத்தப்படவேண்டுமாகவிருந்தால் தமிழ்மக்களின் சம்மதம் பெறப்படவேண்டும்.

இத்திட்டம் என்றோ தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதற்கு அங்கீகாரம் இன்றுமட்டுமல்ல என்றுமே கிடைக்காது.

அதனையும் மீறி இத்திட்டத்தை அமுலாக்க முற்பட்டால் நாம் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டி வரும் என்பதோடு இராஜதந்திர ரீதியில் வெகுஜனப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி வரும் என்பதையும் எனவே இதற்கானநீதியை வழங்குமாறு தமிழ்மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
SHARE

Author: verified_user

0 Comments: