பொலிஸாரின் சேவையினை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் வகையிலும் பொலிஸாரின் கொடுப்பனவை 40 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் யு.கே.திசாநாயக்க தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் 149வது பொலிஸ் தினம் இன்று நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வைபவம் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு உதவிப்பொலிஸ் அத்தியட்சர் ஹக்மன தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் யு.கே.திசாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி மற்றும் பொலிஸ் திணைக்கள கொடி என்பன ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் யு.கே.திசாநாயக்கவினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
உரையினை தொடர்ந்து மதத்தலைவர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு தானங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment