24 Aug 2015

காலி சிறையில் கணவர் விடுவிக்குமாறு மனைவி வேண்டுகோள்

SHARE

புத்தளத்துக்கு தொழிலுக்காகச் சென்ற எனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கேள்வியுற்றேன். அவரை விடுவிக்க உதவுங்கள் என்று, காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அமர்தலிங்கம் உதயலட்சுமி என்ற பெண் கோரிக்கை விடுத்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது,
'எனது கணவரின் பெயர் யோகேஸ்வரன் துஷ்யந்தன் (வயது 27). 2011ஆம் ஆண்டில் திருமணம் செய்தோம். தற்போது எங்களுக்கு ஒரு குழந்தையும் உண்டு. கடந்த 25.5.2015ஆம் ஆண்டு புத்தளத்துக்கு தொழிலுக்கு செல்வதாக கூறிச்சென்ற எனது கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
நான் எனது கணவர் பற்றி பல இடங்களிலும் விசாரித்தேன். பின்னர் அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு காலி சிறைச்சாலையில் இருப்பதாக அறிந்தேன்.

எனது கணவர் எந்த குற்றமும் செய்யாதவர். அவரை ஏன் கைது செய்தார்கள் என்று எனக்கு தெரியாது. கைதுக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.
எனது கணவரின் உழைப்பிலேயே நானும் எனது குழந்தையும் ஜீவியம் நடத்தி வந்தோம். இப்போது எங்களை கவனிப்பதற்கு யாருமில்லை. தயவு செய்து எனது கணவரை விடுவித்து என்னோடு சேர்க்க உதவுங்கள்' எனக் கோரினார்.

SHARE

Author: verified_user

0 Comments: