22 Aug 2015

தேசியப் பட்டியலிலிருந்து ஹிஸ்புல்லாவின் பெயரை நீக்குமாறு ஆர்ப்பாட்டம்

SHARE
தேசிய தௌஹீத்; ஜமாஅத் முக்கியஸ்தர்கள் உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் காத்தான்குடியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை (21) தாக்கப்பட்டதை கண்டித்தும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியல் மூலம் வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்து மீளப் பெறுமாறும் கோரி இன்று சனிக்கிழமை(22) பிற்பகல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 காத்தான்குடி புதிய காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாயலுக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உப தலைவர் மௌலவி எம்.சி.எம்.ஸஹ்றான் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது ஹிஸ்புலலாஹ்வின் காடையர்களை கைது செய், இது நல்லாட்சியா அல்லது காடையர்களின் ஆட்சியா, நல்லாட்சியை கலங்கப்படுத்தும் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஆதிக்கத்தை கொடுக்காதே, மக்களால் தோற்கடிக்கப்பட்டவருக்கு தேசியப்பட்டியல் கொடுக்காதே, காடையர்களின் அட்டகாசத்தை காவல் துறையே உடனடியாக நிறுத்து என்பன போன்ற வனசங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவை வாசித்துக் காட்டி, ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடாத்தக் கூடாது எனவும் இதை மீறி ஆர்ப்பாட்டம் நடாத்தினால் சட்டத்தின் பிரகாரம் கைது செய்ய வேண்டி ஏற்படுமென்றார்.

இதன் போது ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களின் ஊர்வலத்தை பொலிஸாரினால் இதே சட்டத்தை பாவித்து தடுக்க முடியாமல் போனதாகவும் பொலிஸாரின் நீதி எங்கே என இதன் போது பொலிசாரை நோக்கி கேட்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில்; தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உப தலைவர் மௌலவி எம்.சி.எம்.ஸஹ்றான் ஆர்ப்பாட்ட தீர்மானப் பிரகடனமொன்றை வெளியிட்டார் அதில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த கலவரத்துக்கு முழுப்பொறுப்பும் முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வே ஆகும்.

ஹிஸ்புல்லாஹ்வின் காடையர் கூட்டத்தை பொலிசார் அடக்குவததற்கு தவறி விட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படாமல் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர்களை விடுதலை செய்தால் நாம் மட்டக்களப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு முன்னால ஆhப்பாட்டம் நடாத்துவோம்.

ஜனாதிபதி மைத்திரியின் நல்லாட்சியில் நம்பிக்கை உண்டு. ஆனால் மைத்திரி,அட்டகாசம் புரிகின்ற இந்த ஹிஸ்புல்லாஹ்வுக்கு கண்டிப்பாக தேசியப்பட்டியலில் இடம் கொடுக்கக்கூடாது. மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியலில் இடம் கொடுத்ததை மீள் பரிசீலனை செய்வதுடன் அதை ஜனாதிபதி மைத்திரி இரத்துச் செய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் வெளியிடப்பட்டன. இந்தப்பிரகடனம் ஜனாதிபதி அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாக ஊடகங்களில்  வெள்ளிக்கிழமை மாலை செய்தி வெளியானது. 

இதனையடுத்து, காத்தான்குடியில் பட்டாசுகளை வெடிக்க வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆராவரத்தில் ஈடுபட்ட போது ஏற்பட்ட கலவரத்தினால் 11பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது 
SHARE

Author: verified_user

0 Comments: