8 Aug 2015

வட, கிழக்கு மக்கள் முற்றுமுழுதான ஆணையை வழங்க வேண்டும்

SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்திருக்கின்ற அரசியல் தீர்வுத் திட்டத்துக்கு வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு மிகவும் தெளிவாக  தங்களுடைய முற்றுமுழுதான ஆணையை வழங்க வேண்டிய தேவை இந்த தேர்தலில் இருப்பதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் நான்காம் குறிச்சியில் இன்று வெள்ளிக்கிழமை  நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்; உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.


அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  'இம்முறை தேர்தலில்; போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி முறையிலே அதற்குள்ளே தீர்க்கப்படவேண்டும் எனக் கூறுகிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதுவல்ல.

நாங்கள் இதுவரை காலமும் போராடியது ஒற்றையாட்சியின் கீழ் தீர்வை பெறுவதற்காக அல்ல. எமது மக்கள் தங்களது நிலங்களிலே தாங்களே  ஆளுகின்ற வகையில் ஒரு சமஷ்டி முறையை உருவாக்க வேண்டும் என்பது இலங்கை தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அதனை அடிப்படைக் கொள்கையாகவிருந்து வந்திருக்கிறது. அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தெளிவாக மக்கள் முன்னிலையில் அவர்களது ஆணையைப் பெறவேண்டும் என்பதற்காக தேர்தல் விஞ்ஞாபனத்திலே முன்வைத்திருக்கின்றது.

இந்த சமயத்திலே எமது உறவுகள் சிறந்தமுறையில் சிந்தித்து செயற்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்துள்ள தீர்வுத்திட்டத்தை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்  என்ற செய்தி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் இருக்கக்கூடிய தமிழ் மக்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகபடியான வாக்குகள் வழங்குவதன் மூலம் சர்வதேச சமூகத்தின் காதுகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.' என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: