தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூற முடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து மட்டக்களப்பு சித்தாண்டி பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழரசுக் கட்சியின் பிரதேச அமைப்பாளர் ந.சிவநடியான் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, வேட்பாளர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், கோ.கருணாகரம், இரா.துரைரெட்னம், ஞா.சிறிநேசன், கு.சௌந்தரராஜா, ச.வியாளேந்திரன் உட்பட பலர் பலர் கலந்துகொண்டனர்.
இங்கு சம்பந்தன் தொடர்ந்து உரையாற்றுகையில்,
நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப் பெற வேண்டும்.
இதற்கு மாவட்டத்தில் களமிறங்குகின்ற எட்டு வேட்பாளர்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தெளிவூட்ட வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பல தடவை ஜனாதிபதியுடன் கதைத்திருக்கின்றோம்.
சம்பூர் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஐ.நா அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. இதன் ஊடாக நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக எமது பிரச்சினைக்கு எமது தேசியப் பணயத்திற்கு தீர்வு வெளிவர வேண்டும்.
தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது வெளிவந்துள்ளது. அதில் நாங்கள் தெளிவாக எமது நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியிருக்கின்றோம். இதனை எவரும் நியாயமற்றது என்று கூற முடியாது. இது ஏனைய நாடுகளிலும் உள்ள ஆட்சி முறைகளில் ஒத்ததாக பார்க்கப்படுகின்றது.
அதில் எதுவித வித்தியாசங்களும் இல்லை. இதனை எவரும் குறை கூறமுடியாது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தேர்தல் மூலம் நீங்கள் நிருபிக்க வேண்டும்.
இதனை நீங்கள் உணர்ந்து செயற்பட வேண்டும். செயற்படுவீர்கள் என்று நான் நினைக்கின்றேன்.
எமது மக்கள் வன்முறைகளை விரும்பவில்லை. எமது மக்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். இதுதான் எமது நிலைப்பாடும் சர்வதேசத்தின் நிலைப்பாடும்.
விசுவாசமான நல்லிணக்கம் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். இதற்கு இந்த நாட்டின் தேசியப் பிரச்சினையான இனப் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கப்பெற வேண்டும். இதற்கு அமைய இருக்கின்ற புதிய பாராளுமன்றத்தினூடாக இதனை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எமது அபிப்பிராயத்தினை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக அறிவித்துள்ளோம். எமது இவ் விஞ்ஞாபனத்தை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அரசியல், கலை, கலாச்சார, பொருளாதார, அபிலாசைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார்.
0 Comments:
Post a Comment