2 Aug 2015

வருகின்ற அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறையாத அணியோடு பதவியில் அமரும்.

SHARE

தமிழ் சமூகத்தோடு இணைந்து போகின்ற எழுச்சி பெற்ற அரசியலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நகர அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அலிஸாஹிர் மௌலானாவை ஆதரித்து இடம்பெற்ற பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
முஸ்லிம் காங்கிரஸின் அரசியலில் புதிய யுகம் பிறந்திருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாட்டு அரசியலைச் செய்யாமல் கைகோர்த்துக் கொண்டு போகின்ற எழுச்சி பெற்ற வியூகமாக அது இருக்கும்.
சரித்திரத்திலே அதிகாரத்தில் பங்கெடுக்காமல் இதுவரை ஒதுங்கி தங்களுடைய அரசியலை தனியே செய்து கொண்டிருந்த தமிழ் அரசியல் தரப்பினரை கிழக்கில் ஆளும் அதிகார வர்க்கமாக மாற்றிக் காட்டிய பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு உண்டு.

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்த ஜனநாயகப் பாதையை நாம் கிழக்கு மண்ணிலே முன்னுதாரணமாய் நிலைநிறுத்திக் காட்டியிருக்கின்றோம்.
அதனை சாணக்கியமாக தீர்க்க தரிசனமாகச் நுணுக்கமாக செய்து இந்த நெருக்கடியான ஜனநாயகக் கூட்டை பிளவுகள் இல்லாமல் முழு நாடும் பெருமைப்படக் கூடிய வகையில் கொண்டு நடத்தும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டை நான் பாராட்டாமல் இருக்க முடியாது.
அடுத்து வருகின்ற அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு முன்பு அரசாங்கத்தில் வகித்த பதவிகளை விட உயர்வான அந்தஸ்தோடு அதிகாரத்தோடு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் குறையாத அணியோடு பதவியில் அமரும். அப்போது இந்த ஏறாவூர் வரலாறு காணாத அபிவிருத்தியைக் காணும்.
வேறுபாடுகளை நாம் குழிதோண்டிப் புதைத்து விட்டு மைத்திரி யுகத்தில் ரணில் விக்கிரமசிங்ஹ எனும் சாதனையாளனின் வழி நடத்தலில் உலகம் எதிர்பார்த்திருக்கும் மாற்றத்தை நாம் அடையவேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட அரசாங்கம் பெரும்பான்மையோடு அமைகிற போது அத்தனை அபிவிருத்திகளும் உங்கள் காலடிகளை நாடி வரும்.
இந்தத் தேர்தலின் மூலம் கடந்த 10 12 வருடகாலமாக முஸ்லிம் சமூகத்திற்கு இருந்து வந்த இருண்ட யுகம் இல்லாமலாகி விடும்.
சிறுபான்மைச் சமூகங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட யுத்தம் முடிந்ததின் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உணர்வுகளோடு விளையாடி தங்களை வளர்த்துக் கொண்ட ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை வலிய வம்புக்கிழுக்கிற நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம்.
மிக மோசமான கீழ்த்தரமான அரசியலைச் செய்து வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கின்றோம்.
கிறீஸ் பூதம் எனும் விசித்திர அட்டகாசத்தைக் காட்டி சிறுபான்மை இனங்களை சீண்டிப்பார்த்த சீரழிந்த ஆட்சியாளர்கள் இன்று பதுங்கியிருக்கின்றார்கள்.
மஹிந்த ராஜபக்சவின் சாஸ்திரக்காரனுக்கு நமது சிறுபான்மை இனங்கள் ஆண்டாண்டு காலம் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஏனென்றால் மஹிந்தவுக்கு ஆட்சியைப் பிடிக்க ஆசை வார்த்தை காட்டி சாஸ்திரம் சொன்னதால்தான் மஹிந்த தனக்கிருந்த 2 வருட ஆட்சியையும் முன் கூட்டியே கலைத்தார்.
அதுதான் சிறுபான்மை இனங்களுக்கு விமோசனமாய் அமைந்தது. நாட்டுப் பற்று என்ற போர்வையில் போலித்தனமான முழு சர்வதேசத்தையும் பகைத்துக் கொள்ளுகின்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கையைத்தான் மஹிந்த கடைப்பிடித்தார்.
வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தடுக்கின்ற ஒரு விதமான குருட்டு ராஜதந்திரத்தை கைக்கொண்ட ஆட்சியாளர்களை நாங்கள் விரட்டியடித்திருக்கின்றோம்.
முன்னாள் ஆட்சியாளர் மஹிந்தவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த அயராது பாடுபட்ட கேடுகெட்ட அரசியல்வாதிகள், இப்பொழுது நாங்கள் மைத்திரியின் ஆட்கள் என்று வெட்கமின்றி வேசம் போடுகிறார்கள்.
நாட்டின் வங்குரோத்து அரசியலுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இப்பொழுது என்ன முகத்தோடு வந்த வாக்குப் பிச்சை கேட்கிறார்கள் என்பது வியப்பாகவுள்ளது.
ஒரே கல்லிலே இரண்டு மாங்காய்கள் விழுகிற ஒரு காலம் கனிந்திருக்கின்றது.
காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய இரு பிரதேசங்களிலும் ஸ்ரீலமுகாவுக்கு முஸ்லிம் காங்கிரஸ{க்கு சவாலாக இருக்கின்ற இரண்டு அரசியல்வாதிகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற ஓட்டை வண்டியிலே ஏறிக்கொண்டு இடைவழியில்“பஞ்சராகி” நிரந்தரமாகவே வீட்டுக்குப் போகப்போகின்ற சூழ்நிலை வந்திருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரஸின் புதிய எழுச்சிக்கும் போராட்டத்திற்கும் முன்னால் இந்த ஓட்டை வண்டி அரசியல்வாதிகளால் ஒருபோதும் நின்று தாக்குப் பிடிக்க முடியாது என்றார்.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலமுகா பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அலிஸாஹிர் மௌலானா, வேட்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான ஷிப்லி பாறூக் ஆகியோருட்பட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: