ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது. அவர் நமது நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று இரவு காரைதீவில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால, மகாத்மா காந்தி, மார்டின் ஜோசப்கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை பின்பற்ற விரும்புவதாக கூறுகின்றார்.
இந்த தலைவர்கள் தங்களது நாட்டின் மக்களின் சுதந்திரத்திற்காக சம உரிமைக்காக போராடியவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மைத்திரிபால ஒரு முறை மாத்திரமே ஜனாதிபதியாக இருப்பேன் என கூறுவதுடன், தனக்கு பதவி ஆசை இல்லை என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றார். அதற்குள் நாட்டில் உள்ள பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கருமங்கள் நடைபெறும் வரையில் நாம் அவதானமாக செயற்படவேண்டும். எவரையும் எளிதில் நம்ப முடியாவிட்டாலும் மாற்றங்களை நாம் அதானிக்காமல் இருக்க முடியாது என்றார்.
ஜனாபதிபதியின் தேர்தலில் முன்பும் பின்பும் மைத்திரிபால சிறிசேனவுடன் எமது கட்சி பேசி வருகின்றது. தமிழ் மக்களுக்குரிய சரியான அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றது.
இருந்த போதிலும் துரதிஷ்டவசமாக கடந்த மாதங்களில் பலம் வாய்ந்த அரசாங்கம் இருக்கவில்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சிறுபான்மை அரசாங்கமாக இருந்தமையால் முக்கிய விடயங்கள் பல நிறைவேற்ற முடியாமல் போனது. ஆனால் நடைபெறுகின்ற தேர்தலின் பின்னர் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட்டு சகல விடயங்களும் நிறைவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இன்று தமிழ் மக்களின் பிரச்சினை முன்னொருபோதும் இல்லாதவாறு சர்வதேசதமயமாக்கப்பட்டுள்ளது. விரைவில் சர்வதேசத்தால் அறிக்கை ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.
அவ்வாறிக்கையானது, இலங்கையின் அரசியலில் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்தும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை என்றார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் உண்மைத் தன்மை ஆராயப்பட வேண்டும். அதனூடாக நீதி வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும்.
அதற்காக வடகிழக்கில் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் சர்வதேச சமூகத்தின் உதவியுடனும், புலம்பெயர் மக்களது உதவியுடனும் திட்டங்களை தீட்டி அரசுடன் பேசி கருமங்கள் பலவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
ஆகவே இவற்றையெல்லாம் தமிழ்த் மக்கள் உணர்ந்து ஒற்றுமைப்பட்டு வீட்டு சின்னத்திற்கு வாக்களித்து இத்தேர்தலில் ஸ்திரமான வெற்றியை கொடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் தமிழ் மக்களை கைவிடாது சிறந்த தீர்வினை விரைவில் பெற்றுக் கொடுக்கும் என கூறினார்.
0 Comments:
Post a Comment