25 Aug 2015

எனது சகோதரர்கள் மூன்று பேரையும் தாயையும் இழந்துள்ளோம்: வாழைச்சேனையில் சாட்சியம்

SHARE

எனது சகோதரர்கள் மூன்று பேரையும், எனது சகோதரியின் கணவரையும், எனது தாயையும் இழந்துள்ளோம் என கவலையுடன் வாழைச்சேனை கிண்ணையடியைச் சேர்ந்த ந.சிவலிங்கம் என்பவர் தெரிவித்தார்.
தமது சகோதரர்கள் தொடர்பான விடயத்தனை கண்ணீர் மல்க மட்டக்ளப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற காணமல் போனவர்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணையின் போது சாட்சியமளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில்,
நடராஜா செந்தூரன் (வயது 19) எனது இளைய சகோதரர் பாடசாலைக்கு செல்லும் போது 2000.11.19ஆம் திகதியன்று காணாமால் போயிருந்தார். அருகில் உள்ள கறுவாக்கேணி வித்தியாலயத்திலே கல்வி பயின்று வந்தார். காலை 8 மணிக்கு சென்றவர் மாலையாகியும் வீடு திரும்பாததையிட்டு கவலையுற்று பல இடங்களிலும் தேடினோம் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் எனது சகோதரனின் சடலத்தினை அன்றைய தினம் சந்திவெளி பாலையடித்தோனா எனும் இடத்தில் கிடப்பதாக அறிந்தோம்.
எனது சகோதரனின் சடலத்தினை ஏறாவூர் வைத்தியசாலையில் இருந்தே பெற்றுக் கொண்டோம். இது வரைக்கும் எனது சகோதரனை யார் கொண்டார்கள் என அறியமுடியவில்லை. அக்காலப்பகுதியில் இராணுவம் மற்றும் ஆயுதக் குழுக்களும் இருந்தன.
இதேபோன்று எனது மற்றைய சகோதரர் ந.பரமேஸ்வரன் (வயது 29) என்பவர் 2005 காலப்பகுதியில் காணமல் போயிருந்தார். மாவடிவேம்பு வந்தாறுமூலைக்கு மேசன் தொழிலுக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. பின்னர் இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இவரையும் யார் கொலை செய்திருப்பார்கள் என்று அறியமுடியாமல் போய்விட்டது.
இதேபோன்று எனது மூத்த சகோதரர் ந.வினாயகமூர்த்தி (வயது 31) என்பவர் 1985 இல் காணாமல் போனார். கும்புறுமூலை பகுதிக்கு வழக்கம் போல் மீன் வியாபார நடவடிக்கைக்காக சென்ற வேளை காணாமால் போயிருந்தனர். இவரை அக்காலப் பகுதியில் அங்கிருந்த இராணுவத்தினரே பிடித்து சென்றிருந்தார்கள் என அப்பகுதியில் இருந்த பொது மக்கள் சிலர் தெரிவித்தனர்.
இது மட்டுமல்லமால் 1989ஆம் ஆண்டு எனக்கு 18 வயது இருக்கும் போது இரவு நேரத்தில் வீடு வந்த சிலர் வளவின் கதவினை உடைத்து அம்மாவை அழைத்து தலையில் வெடி வைத்து சுட்டுக் கொன்றனர். நானும் எனது சகோதரங்களும் அம்மா இல்லாமல் மிக துன்பப்பட்டு வாழ்ந்தோம். இவ்வாறான நிலையிலேயே எனது சகோதரர் 3 பேர்களையும் எனது சகோதரியின் கணவரையும் இழந்துள்ளோம் என கவலையுடன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 1081 முறைப்பாடுகளில் ஆணைக்குழு சாட்சிகளை  விசாரணை மேற்கொண்டு வருகிறது.
SHARE

Author: verified_user

0 Comments: