எமது புதிய அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்படும் என பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய தேசிக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஞாயிறு மாலை (09-08-20150) கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற போதே அவர் இந்த உத்தரவாதத்தை வழங்கினார்.
கல்முனை மாநகர முதல்வரும் மு.கா. பிரதிச் செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தில் மு.கா.தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம், மு.கா. செயலாளர் நாயகமும் ராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், வேட்பாளர்களான பைசால் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், தயா கமகே, சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.ரஸ்ஸாக், பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத் உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு பிரதமர் ரணில் மேலும் பேசுகையில் குறிப்பிட்டதாவது;
இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டி ஸ்திரமான அரசாங்கம் அமையப் பெற்றதும் கல்முனை மாநகரம் புதிய நவீன நகரமாக அபிவிருத்தி செய்யப்படும். அத்திட்டத்தினுள் சம்மாந்துறைத் தொகுதியும் உள்ளடக்கப்படும்.
அத்துடன் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமினால் உள்ளூராட்சி அமைச்சர் கரு ஜெயசூரியவிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையின் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளுராட்சி சபை உருவாக்கித் தரப்படும்.
ஒலுவில் துறைமுகத்தின் மூலம் இப்பிராந்தியத்தின் மீன்பிடித் தொழிலை விஸ்தரிப்பதற்கு காத்திரமான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதார வர்த்தக வலயங்களும் ஏற்படுத்தப்படும்.
இனவாதம், மதவாதம் தலைதூக்க இடமளிக்க மாட்டோம். மஹிந்தவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவதன் மூலமே நாட்டில் மலர்ந்துள்ள நல்லாட்சியை பாதுகாத்து இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.
இக்கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர். இதன்போது பிரதமர் ரணில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
0 Comments:
Post a Comment