4 Aug 2015

மட்டு நகரில் தபால் மூல வாக்களிப்பு அமைதியான முறையில் நிறைவு!

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் நேற்று திங்கட்கிழமை (03) சின்ன உப்போடையில் உள்ள பிரதேச கல்வி அலுவலகத்தில் தபால் மூல வாக்களிப்பில் கலந்து கொண்டனர். அவ்வகையில் நேற்று நடைபெற்ற அனைத்து தபால்மூல வாக்களிப்புக்களும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 9842 பேர் தகுதி பெற்றுள்ளனர் என மட்டக்களப்பு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புக்காக மட்டக்களப்பு, கல்குடா , பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் 176 நிலையங்கள் வாக்களிப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதே நேரம் பாடசாலைகள் தவிர்ந்த அரச அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், அரசாங்க காரியாலயங்கள் என்பனவற்றில் வாக்களிப்புகள்  5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எமது தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நாம் திராவிட அமைப்பு சுயேட்சையாகப் போட்டியிடுகின்றது. மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார். மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும் , பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


இதேவேளை இம் மாவட்டத்தில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன. அதன்படி, மட்டக்களப்பில் 199 நிலையங்களும், கல்குடாவில்115 நிலையங்களும்,    பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்கள்  நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
SHARE

Author: verified_user

0 Comments: