இலங்கையில் இயற்கையாக அமையப்பெற்ற தேசிய வனவிலங்கு பூங்காக்களில் வஸ்கமுவ வனவிலங்கு பூங்காவும் ஒன்று. கொழும்பில் இருந்து 225 கிலோ மீற்றர் தொலைவில் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் அமைந்துள்ள இந்த தேசிய வனவிலங்கு பூங்காவில் 1984 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மகாவெலி திட்டத்தின் போது பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கான சரணாலயமாக அன்றைய அரசு தீர்மானித்தது.
1938ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வனமாக அடையாளங்காணப்பட்ட வஸ்கமுவ தேசிய பூங்கா 1970ஆம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வனமாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
வஸ்கமுவ வனவிலங்கு பூங்காவில் அதிகமாக கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் வசிப்பதை காணலாம். இலங்கையில் அதிக பறவைகள் வாழும் பூங்காவாக இப்பூங்கா காணப்படுகின்றமை விசேட அம்சமாகும். வலஸ் கமுவ என்ற பெயரே காலப்போக்கில் மருவி வஸ்கமுவ என்று கூறப்படுவதாக வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன. வலஸ் என்றால் கரடி என்று பொருட்படுகிறது கமுவ என்றால் பலகை என்று பொருளாகும்.
உலர்வலய காலநிலையை கொண்ட வஸ்கமுவ பிரதேசத்தின் ஆண்டுதோறும் வெப்பநிலை 28 பாகை செல்சியஸாக (82 பாகை பெரனைட்) காணப்படுகிறது. ஆண்டு தோறும் ஒக்டோபர் முதல் ஜனவரி மாதம் காலப்பகுதிகளில் இப்பிரதேசத்திற்க 1650-2100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கிறது. ஜூலை முதல் செப்டெம்பர் வரையான காலங்களில் வறட்சி காலநிலை காணப்படுகிறது. இத்தேசிய பூங்காவின் உயர்ந்த பிரதேசமாக சுது கந்த (வௌ்ளை மலை) காணப்படுகிறது. இதன் உயரம் 470 மீற்றராகும். அதாவது 1540 அடிகள் உயரம் கொண்டது இம்மலை. வஸ்கமுவ தேசிய பூங்காவின் மண் குவாட்ர்ஸ் மற்றும் பளிங்கு கற்களைக் கொண்டதாக காணப்படுகிறது.
இலங்கையின் பசுமை மாறாத உலர்வலயக் காடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வஸ்கமுவ தேசிய பூங்காவானது ஆரம்ப, இரண்டாம் நிலை, சதுப்புநிலக் காடுகள் மற்றும் புல்வௌிகளைக் கொண்டதாக காணப்படுகிறது.
பராக்கிரமபாகுவினால் நிறுவப்பட்டவை என்று நம்பப்படும் மாலகமுவ, வில்மிடிய, டஸ்தொட்ட வடிகாலமைப்புக் குளங்கள், மற்றும் காலிங்க யோத எல சுரங்கம் எனபவற்றின் இடிபாடுகள் இன்னும் வஸ்கமுவ தேசிய பூங்காவில் காணப்படுகின்றமை சிறப்பம்சமாகும். மேலும் ஆரம்பத்தில் பராக்கிரம சமுத்திரத்தின் இடது மினிப்பே அணைக்கட்டின் அம்பன் கங்கையுடன் இணையும் இடது வடிகால் வஸ்கமுவ ஊடாகவே செல்கிறது.
எல்லாலனுக்கும் துட்டகாமினிக்கும் இடையிலான யுத்தம் இடம்பெற்ற களமான யுடங்கன பிட்டிய இப்பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இங்குள்ள சமவௌியில் கந்தாருபிட்டிய யுத்தத்துக்கு முன்னர் துட்டகாமினியின் படைகள் முகாமிட்டிருந்தன என்று நம்பப்படுகிறது. இத்தேசிய வனம் அமைந்துள்ள பிரதேசத்தில் மஹாநங்கவினால் நிர்மாணிக்கப்பட்டது என்று கருதப்படும் சுலங்கனி தூபியின் இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. 966 அடி உயரம் (294 மீற்றர்) கொண்ட இத்தூபியானது ருவன்வெலிசேயவை விடவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தூபியின் இடிபாடுகளின் செங்கற்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் யுடங்கன விகாரையில் தற்போது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதில் சில வெண்கல சிலைகளும் கடைசி சிங்கள் மன்னன் ஶ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பயன்படுத்தியதாக நம்பப்படும் கிண்ணம் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள அதிக எண்ணிக்கையான பல்லுயிர்கள் வாழும் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக வஸ்கமுவ காணப்படுகின்றது. இங்கு 150 வகையான பூக்கும் தாவரங்கள், காணப்படுகின்றன. அவற்றில் பொருளாதார பெறுமதி வாய்ந்த கிரிப்டோகொரின் வொல்கரி மற்றும் முன்ரொனியா என்பனவும் உள்ளடங்குகின்றன. இப்பிரதேசத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களும் சதுப்பு நிலக்காடுகளும் அதிக எண்ணிக்கையான உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவாக காணப்படுகிறது. இவ்வனப்பிரதேசத்தில 1,700 பழைமை வாய்ந்த புளிய மரம் காணப்படுகிறது. இதற்கு ஓடம் நங்கூரமிட்ட புளியமரம் ( Canoes-Moored-Tamarind) என்று அழைக்கப்படுகிறது.
வஸ்கமுவ தேசிய பூங்காவில் சுமார் 23 பாலூட்டிகள் காணப்படுகின்றன. 150 யானைகள் அதில் உள்ளடங்குகின்றன. மகாவெலி ஆற்றின் கரையோரங்களில் தனியாக திரியும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஊதா நிற முகம் கொண்ட குரங்கு மற்றும் பொதுவாக இலங்கையில் காணப்படும் குரங்கு இனம் என்பன இப்பூங்காவில் அதிகமாக வசிக்கின்றன. எருமைமாடு, மான் வகை என்பன பொதுவாக காணக்கூடியதாக உள்ள அதேவேளை இலங்கைக்கே உரித்தான சிறுத்தை இனம், கரடி, காட்டுப்பூனை என்பன மிக அரிதாக காணக்கிடைக்கிறது.
சுமார் 143 இன பறவைகள் வஸ்கமுவ தேசிய பூங்காவில் வாசம் செய்கின்றன. இவற்றில் 8 வகையான பறவைகள் அழிந்து வரும் இனங்களில் உள்ளடங்குகின்றன. சிவப்பு முக பூங்குயில், காட்டுக்கோழி என்பன இங்கு நிரந்தரமாக வசிக்கின்றன. மேலும் பல பறவைகள் அவ்வப்போது வந்து செல்கின்றன. மயில், செங்கால் நாரை, கருப்புத்தலை கொக்கு, யுரேஷியன் ஸ்பூன்பில் என்பன இங்கு வாழும் ஏனைய பறவைகளாகும். மிக அரிய தவளைவாய் ஆந்தை, மர முந்திரிகை சிறகு குயில் என்பனவும் இப்பிரதேசத்தில் காணப்படும் பறவைகளாகும்.
நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய 8 வகை உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. அவற்றில் பெஜர்வர்யா புல்லா எனப்படும் தவளையினமும் ஒன்றாகும். 17 ஊர்வன, 50 வகை வண்ணத்துப்பூச்சி என்பவற்றின் வாசஸ்தலமாக இத்தேசிய பூங்கா காணப்படுகின்றன. இதில் 8 வகை வண்ணத்துப்பூச்சிகள் அழிந்து வரும் இனமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வீடுகளில் வளர்க்கப்படும் ஆட்டு மந்தைகள் இப்பகுதியில் மேய வருவதனால் இங்கு வாழும் உயிரினங்கள் விரைவில் நோய் தொற்றுக்குள்ளாகின்றன. அத்தோடு நீர் மற்றும் உணவுக்காக, குறிப்பாக புற்களை சாப்பிடும் உயிரினங்கள் தமது தேவைக்காக போட்டியிடவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன. அத்தோடு இப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் ஆட்டு மந்தைகளினால் நாசம் செய்யப்படுகின்றன. சட்டவிரோத குடியேற்றங்கள் இவ்வனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதேவேளை, இங்கு வாழும் யானைகள் மக்களின் வீடுகளை உடைத்து நாசம் செய்வதுடன் விவசாய நிலங்களையும் நாசம் செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
மொரகஹகந்த மீள்குடியேற்றம் யானைக்கும் மக்களுக்கும் இடையிலான மோதல்களுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது என சுற்றாடல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறு இருப்பினும் விலங்கினங்களின் செயற்பாடுகள், இயற்கை அழகை ரசிக்க என பல்வேறு வகையிலும் பிரயோசனம் மிக்கதாக வஸ்கமுவ தேசிய பூங்கா அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. n.l
0 Comments:
Post a Comment