7 Aug 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் சரியானமுறையில் சிந்தித்து வாக்களித்தால் நான்கு ஆசனங்களைப்பெறமுடியும்

SHARE

வெற்றிலைக்கு வாக்களித்தால் முஸ்லிம்கள் வந்துவிடுவார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பொய்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைக்கூறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக் எந்தவிதமான அருகதையும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

2015.08.03 இரவு மட்டக்களப்பு கூழாவடியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

கூழாவடி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேட்பாளர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

கூழாவடி ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் ஜெயக்காந்தன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றதுடன் இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் சரியானமுறையில் சிந்தித்து வாக்களித்தால் நான்கு ஆசனங்களைப்பெறமுடியும்.நாங்களும் இந்த தேர்தலில் வெற்றிபெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.
வெற்றிலைச்சின்னம் என்னும்போது அதில் மகிந்தவின் முகம் தெரிவதாக சிலர் கூறுகின்றனர்.எமது மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றவர்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம்.

கட்சிகளுக்குள் சில முரண்பாடுகள் ஏற்படுவது சகஜமானது.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே பல முரண்பாடுகளும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.இவ்வாறான நிலையில் நாங்கள் பெரும்பான்மையினத்துக்குள் இருக்கும் பிரச்சினையை அலட்டிக்கொள்ளக்கூடாது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் தலைவராக இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் ஒரு அங்கமாக 2008ஆம் ஆண்டு தொடக்கம் இருந்துவருகின்றது.

இந்த நாட்டை 2021ஆம் ஆண்டுவரை ஆளப்போகின்றவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.இந்த நாட்டின் அடுத்த அமைச்சரவையினையும் தீர்மானிப்பவர் அவர்தான்.அவரை புறந்தள்ளிவிட்டு மட்டக்களப்பில் என்னால் செயற்படமுடியாது.

நான் தமிழ் தேசிய கூட்டமைப்பினைப்போன்று ஈழத்தினைப்பெற்றுத்தருவேன்,வடக்கு கிழக்கினை இணைத்துதருவேன்,சுயாட்சிபெற்றுத்தருவேன் என்று சொல்லவில்லை.நான் சொல்வது எல்லாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களை மீட்டெடுப்பேன்,சமூகத்தினை ஆளுமைமிக்க சமூகமாக மாற்றுவதற்கு பணியாற்றுவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு எதனையும் செய்யவில்லையென மக்கள் ஏங்குகின்றனர்.அவர்கள் வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றவில்லை.
அதன்காரணமாகவே ஜனாதிபதி தலைமை தாங்கும் கட்சியில் போட்டியிடுவதன் மூலம் அபிவிருத்தியையும் அதிகாரத்தினையும் பெற்றுக்கொள்ளமுடியும் என்பதற்காகவே நான் இதில் போட்டியிடுகின்றேன்.
வெற்றிலைக்கு வாக்களித்தால் முஸ்லிம்கள் வந்துவிடுவார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினால் பொய்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனைக்கூறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினருக் எந்தவிதமான அருகதையும் இல்லை.குற்றஞ்சாட்டுவதற்கு தகுதிவேண்டும்.
2012ஆம் ஆண்டு தேர்தலில் பிள்ளையானை வெற்றிபெறச்செய்யக்கூடாது என்பதற்காக வடக்கில் இருந்து அணிஅணியாகவந்து பிரசாரம் செய்தனர்.11 ஆசனங்களையும் கிழக்கு மாகாணசபையில் பெற்றுக்கொண்டனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளினால் என்னால் அங்கு ஆட்சியமைக்கமுடியாத நிலைமையேற்பட்டது.

நல்லாட்சி ஏற்பட்டபோது 11ஆசனங்களைக்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏழு ஆசனங்களைக்கொண்ட ஹக்கீமிடம் அடிபணிந்து முதலமைச்சரை வழங்கியுள்ளது.இதுதான் இவர்கள் நூறு நாளில்செய்தமாற்றம். தமிழன் ஆண்டதை இல்லாமல் செய்ததே இவர்கள் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்த அதிகாரம்.
தமிழர்களுக்கு கிடைக்ககூடிய மிககுறைந்தபட்ச முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொடுக்கமுடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிள்ளையான் முஸ்லிம்களுக்கு வாக்கெடுத்துகொடுக்கின்றார் என தெரிவிக்கின்றனர்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் பிரிந்துநிற்கின்றனர்.

முஸ்லிம்களுக்கு 89ஆயிரம் வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது.இதில் 60ஆயிரம் வாக்குகள் அளிக்கப்படுகின்றன.ஆனால் தமிழர்களில் இரண்டரை இலட்சம் வாக்குகள் உள்ளன.அவற்றில் ஒன்றரை இலட்சம் வாக்குகள் அளிக்கப்படுகின்றன.இந்த நிலையில் ஹிஸ்புல்லாவை விட அதிக வாக்குகளைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைச்சராக என்னால் வரமுடியும்.

இவ்வாறு எழுந்தமானமான கருத்துகள் தெரிவிக்கப்படுமானால் எவ்வாறு தமிழர்கள் ஆள்வது வளர்வது.தமிழ் பிரதேசங்களை எவ்வாறு கட்டியெழுப்புவது.அமீர் அலியை தமிழ் பிரதேசங்களுக்கு அபிவிருத்திக்குழு தலைவராக்கி அவரின் படம்போட்டு அமைக்கப்பட்டுள்ள வீதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சென்று திறக்கின்றனர்.இதனைவிட கேவலமான விடயம்வேறு என்ன இருக்கின்றது.

பிள்ளையான் சிறுபிள்ளைத்தனமான அரசியல் செய்கின்றார் என்று யாரும் சொல்லமுடியாது.நாங்கள் பாடசாலை கல்வியில் குறைந்திருக்கலாம் ஆனால் அனுபவம் இருக்கின்றது.அரசியல் கற்று உள்ளோம்.அதில் தேறியும் உள்ளோம்.செய்துகாட்டியும் உள்ளோம்.

தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் வெற்றிபெறும் சூழ்நிலையினை ஏற்படுத்தவேண்டும்.இம்முறை ஹிஸ்புல்லாவை விட அதிகவாக்குகளை நான்பெறுவேன்.தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று ஆசனங்களைப்பெற்றால் நான்காவது ஆசனமாக பிள்ளையான் வரட்டும்.அவர்கள் எதிரணியில் இருக்கட்டும் பிள்ளையான் ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்து அபிவிருத்தி செய்யட்டும்.

நான் கருணாவுடன் வந்ததன் காரணமாக இன்று இந்த நிலையில் இருக்கின்றேன்.நான் பிரபாகரனுடன் சென்றிருந்தால் நான் இன்று இறந்திருப்பேன்.நான் முள்ளியவாய்க்காலில் வெள்ளைக்கொடியை ஏந்திவந்து செத்திருக்கமாட்டேன்.நான் ஏதாவது ஒரு பக்கத்தில் எப்போதும் உறுதியாக நிற்பேன்.மகிந்த ஆற்றிய பணிக்காக அவருடன் நின்றேன்.

தாயை நேசிக்கும் மக்கள் தாய் மண்மையும் நேசிப்பார்கள் என்று நம்புகின்றேன்.-2020ஆம்ஆண்டுவரை இருள்சூழ்ந்த பயணத்தினை செய்யப்போகின்றோமா அல்லது வாக்களித்து எமது கரத்தை பலப்படுத்தபோகின்றோமா என்பதை தீர்மானிக்கவேண்டும்.என மேலும் தெரிவித்தார் 
SHARE

Author: verified_user

0 Comments: