26 Aug 2015

ஆயுதமுனையில் எனது மகன் அழைத்துச் செல்லப்பட்டார்

SHARE
கடந்த 2007.07.17ஆம் திகதி எனது சகோதரியின் வீட்டில் மதிய உணவு உட்கொண்டிருந்த போது எனது மகன் இ.புண்ணியமூர்த்தி (வயது 24)கருணா குழுவினரினால் ஆயுதமுனையில் அழைத்துச் செல்லப்பட்டார் என சித்தாண்டியைச் சேர்ந்த இ.மாரிமுத்து (வயது 72) தெரிவித்தார்.

கோறளைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற  காணமல் போனவர்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், சம்பவத்தினத்தன்று மணியன் என்பவரும் மற்றைய இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் வந்து எங்களை தள்ளிவிட்டு  எனது மகனை அழைத்து சென்றனர்.
மறுநாள் வந்தாறுமூலையில் இருந்த அவர்களது அலுவலகத்துக்கு சென்று கேட்டபோது மகனை வேறு இடத்துக்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பல இடங்களில் தேடியும் பலன் கிடைக்கவில்லை.மட்டக்களப்பில் உள்ள மனித உரிமை அமைப்பிடம் சென்று மகனின் விடயம் தொடர்பாக  முறையிட்டு  ஒரு கடிதம் பெற்று அதனை மணியம் என்பவரிடம் கையளித்தோம். அதனை பார்வையிட்டுவிட்டு எங்கள் கண் முன்னே கிழித்து எறிந்தார்.

தற்போது இவர் கிரான் பகுதியில் வாழ்ந்து வருகின்றார். எங்களுக்கு எதுவிதமான பண உதவியோ நஸ்டஈடோ தேவையில்லை. மேற்குறிப்பிட்ட நபரை விசாரணை செய்து எனது மகனுக்கு என்ன நடந்தது என்று கேட்டு மகனை கண்டு பிடித்து தாருங்கள் என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: