கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, குருக்கள் மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயத்தின் இரண்டாம் வருட சித்திரத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.
கடந்த 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது வெகுவிமர்சையாக நடைபெற்றுவருகின்றது.
இந்த ஆலயத்தின் சிறப்பு வாய்ந்த உற்சவமான திருவேட்டைத் திருவிழா ஆலய முன்றலில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமான் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேரடியில் விசேட பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து ஆண்கள் ஒரு பகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் தேரினை இழுத்துச்செல்ல தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தேரோட்டத்தின்போது அடியார்கள் பஜனைகள் செய்தும் தேரோட்டப்பாடல்கள் பாடியும் இறைவனை வழிப்பட்டனர். தேரோட்டத்தினை தொடர்ந்து முருகப்பெருமான் பச்சையால் அலங்கரிக்கப்பட்டு பச்சைத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
நாளை சனிக்கிழமை காலை குருக்கள்மடம் சமுத்திரத்தில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சொர்ணம் குழுமத்தினால் ஆலயத்திற்கு ஒரு அடி நீளம் கொண்ட தங்கவேல் வழங்கிவைக்கப்பட்டது சிறப்பம்சமாகும். சொர்ணம் குழுமத்தின் தலைவர் மு.விஸ்வநாதனினால் அன்பளிப்பு செய்த இந்த தங்கவேலை அவரின் சார்பில் முகாமையாளர் கோ.குணபாலச்சந்திரன் வழங்கிவைத்தார்.
0 Comments:
Post a Comment