26 Aug 2015

ஜனாதிபதி மைத்திரிக்கு யோகேஸ்வரன் எம்.பி கடிதம்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் கமநல சேவைத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில்  நியமிக்கப்பட்டுள்ள சிங்கள உத்தியோகத்தர்களை திரும்ப பெறுமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கோரியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் யோககேஸ்வரன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த அரசாங்கத்தினால் விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்துக்கான போட்டிப் பரீட்சை நடாத்தப்பட்டு நீண்ட காலத்தின் பின் தற்போது நியமனம் வழங்கப்பட்டதாக அறிகின்றேன்.
இவ்வேளை இந் நியமனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 தமிழர்களுக்கும், 75 சிங்களவர்களுக்கும், 3 முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 75 சிங்களவர்களும் வடக்கு கிழக்கு சாராத வெளி மாகாணத்தை சேர்ந்தவர்கள்.
அத்தோடு வட மாகாணத்தில் வழங்கப்பட்ட 361 விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் 29 பேர் மாத்திரமே தமிழர்கள் அதிலும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் இருந்து எவரும் நியமிக்கப்படவில்லை.
தற்போது தங்கள் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள நல்லாட்சி இந்நாட்டில் உள்ள அனைத்து இன மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாப்பதாக அமைந்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு மக்களை முக்கியமாக கருத்தில் கொண்டு நடாத்தப்பட்ட இப்போட்டிப் பரீட்சையில் வெளி மாகாணத்தை சேர்ந்த 75 சிங்கள சகோதர சகோதரிகள் உள்வாங்கப்பட்டமை வடக்க கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் தொழில் ரீதியான உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது.
எனவே தயவு செய்து தற்போது வழங்கப்பட்டுள்ள விவசாய ஆராய்ச்சி உதவியாளர் நியமனத்தில் உள்வாங்கப்பட்ட வெளி மாவட்டங்களை சேர்ந்த 75 உத்தியோகத்தர்களையும், அவர்களது பகுதிக்கு இடமாற்றி விட்டு இவ்விடத்திற்கு விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் பேசும் சமூகத்துக்கு பெரும்பான்மையாகவும்,
அத்தோடு வடக்கு கிழக்கு பகுதியில் ஏனைய சமூகத்துக்குமாக இவ் உத்தியோகத்தை வழங்கி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன். தங்களது அன்பும், ஆதரவும் இந்நடவடிக்கை சார்பாக கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன் என அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
SHARE

Author: verified_user

0 Comments: