மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 30 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ச.தங்கராஜா, நேற்று வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள மதுவரித்திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் அதிகளவு மதுபாவனையுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த போதை ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சர் என்.சோதிநாதன் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனடிப்படையில் நேற்று மட்டக்களப்பு, காத்தான்குடி மற்றும் மஞ்சந்தொடுவாய் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 10 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ச.தங்கராஜா தெரிவித்தார்.
இதன்போது இவர்கள் தலா 4,000 ரூபாய் வீதம் தண்டப்பணம் விதிக்கப்பட்டு நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் கல்குடா ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சிறுவர்களுக்கு சிகரெட்டுகளை விற்பனை செய்த 20 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தலா 2,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதாகவும் பொறுப்பதிகாரி ச.தங்கராஜா தெரிவித்தார்.
இதன்போது மூலம் சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த வர்த்தக நிலையங்களுக்கு மொத்தம் 80,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 09ஆம் திகதி முதல் அனுஷ்டிக்கப்பட்டுவரும் போதைப்பொருள் ஒழிப்பு மாத நிகழ்வின் போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் 49 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ச.தங்கராஜா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment