3 Mar 2015

ஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த மக்கள் எதிர்காலத்தில் அவதானமாக இருக்க வேண்டும்

SHARE
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கான மாற்றம் என்று புதிய ஜனாதிபதி ஆட்சியை பொறுப்பெடுத்திருக்கிறார். இந்த மாற்றத்திலே அதிகளவான பங்கு தமிழர்களுடைய பங்கு என்பதற்கு மாற்றுக்கருத்திற்கிடமில்லை என்று கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள பேத்தாளை விபுலானந்தா கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் வித்தியாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், நாங்கள் பிரச்சாரம் செய்த மஹிந்த ராஜபக்ஷ்வின் தோல்வியை ஏற்றுக் கொண்டு தற்போதுள்ள அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று எங்களுடைய பணிகளை ஆற்றிக் கொண்டு இருக்கிறோம். இந்த அரசாங்கத்தில் தமிழர்களுடைய பங்கு என்ன அவர்களுக்கு தற்போது கிடைத்திருக்கின்ற நன்மை என்ன என்று பார்க்கின்ற போது பல குழப்பங்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக 100 நாள் வேலைத்திட்டத்திலே தமிழர்களுடைய பங்களிப்பாக அவர்கள் வேண்டி நின்ற அதிகார பகிர்வு, முறையில் என்ன மாற்றம் இடம் பெற்று இருக்கின்றது. அது எழுத்துருவிலே வரா விட்டாலும் பேச்சலவிலாவது வந்துள்ளது என்று பார்த்தால் எதுவும் இல்லை.

இந்த மாற்றத்தினூடாக தமிழர்களது பிரச்சினைகளைப் பெற்றுத் தருவோம் என்று சொன்ன கட்சிகள் தமிழர்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்று அவதானித்துக் கொண்டிருக்கிறோம். தேர்தல் திருத்தம் ஊடாக தொகுதிவாரியான தேர்தல் முறையினூடாக தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமாக இருந்தால் என்னைப் பொறுத்தவரை அது இல்லை என்பதுதான் எனது முடிவு.

தலைவர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதனால் தமிழர்களுக்கு எதனைப் பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள் என்பதை எதிர்காலத்திலே வாக்களித்த மக்கள் அவதானமாக இருந்து பார்க்க வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு என்றும் கூறினார்.

வித்தியால அதிபர் ரீ.சந்திரலிங்கம்; தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக கல்குடா கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ரீ.ரவி, கோறளைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதி நிதிகள், பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: