14 Mar 2015

சுய நிர்ணய உரிமையுடன் தீர்வு வேண்டும்

SHARE
தேசிய அரசாங்கத்தின் இருப்பு வட கிழக்கிலே சுய நிர்ணய உரிமையுள்ள ஒரு பிரதேசத்தை உருவாக்குகின்ற ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தோடு பாராளுமன்றம் கலைந்துவிடாது 2016 வரை இந்த அரசாங்கம் சென்றாலும் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு இறுதி நாள் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மாகாண அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

´இன்று ஒரு வசதியினமான முறையிலே இங்கு ஒரு சிறந்த விளையாட்டுப் போட்டியை நிகழ்த்திக் காட்டியுள்ளீர்கள். இந்த விளையாட்டு போட்டியில் சகலரையும் கவரக்கூடிய உடற்பயிற்சிக் கண்காட்சி சிறப்பாக இருந்தது. இருந்தாலும் ஒரு குறை சக்கரைப் பொங்கலில் ஒரு பயறு கடிபடுவதுபோல் பெண் பிள்ளை மாத்திரம் வைத்து உடற்பயிற்சி கண்காட்சிகளை நடாத்துவது ஒரு கவலையான விடயம். அனேகமான பாடசாலைகளில் ஆண் பிள்ளைகளை விட்டு விட்டு உடற்பயிற்சி கண்காட்சி செய்வது காட்டுவது கவலை தருகின்ற விடயம். இனிவருகின்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆண் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இந்த ஊருக்கு விளையாட்டு மைதானம் இல்லாமை மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது. 1977ம் ஆண்டுகளிலே இந்த பிரதேசத்தில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரச அதிகாரிகள் மேற்கொண்டார்கள். ஆனால் காலாகாலமாக தமிழரசுக் கட்சியை ஆதரிப்பவர்கள் இந்த பொது மைதானம் அமைப்பதிலே ஈடுபாடு காட்டியதன் காரணமாக அவர்களைப் பலிவாங்குகின்ற நோக்கத்திலே அன்று இருந்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அந்த விளையாட்டு மைதானத்தை அவரது ஆதரவாளர்களுக்கு குடியிருப்புக்காக வழங்கி விட்டார். அதன் காரணமாக 1977களில் இப்பிரதேசத்துக்கு வரவிருந்த விளையாட்டு மைதானத்தை இழந்திருக்கின்றோம்.

தேசிய அரசாங்கம் இருந்தால் மட்டும் தான் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்க்கப்படும். நான் விரும்புகின்றேன் இந்த நூறு நாள் வேலைத் திட்டத்தோடு பாராளுமன்றம் கலைந்து விடாது 2016ம் ஆண்டு வரை இந்த அரசாங்கம் சென்றாலும் கூட நல்லாதாகத்தான் அமையும். இந்த இனப்பிரச்சினைக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுகிறோம்; என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலான் பெரேரா போன்றவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த தேசிய அரசாங்கத்தின் இருப்பு வட கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழர்களது சுய நிர்ணய உரிமையுள்ள ஒரு பிரதேசத்தை உருவாக்குகின்ற ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்யும். அப்பொழுது தான் ஆகுதிகளாகி விட்ட எமது அருமை சகோதரர்களுடைய கனவுகள் பலிக்கும் அந்த கனவுகள் பலிக்கின்ற போது நாங்களும் ஒரு சிறந்த ஈழ மணித்திருநாட்டிலே எல்லோரும் இந்த நாட்டினுடைய மக்கள் என்கின்ற வரைவிலணக்கத்திலே தமிழன் இஸ்லாமியன் சிங்களவன் பறங்கியன் என்கின்ற வேற்றுமையின்றி எல்லோரும் ஓர் இனம் ஓர் குலம் இந்நாட்டின் குடி மக்கள் என்ற சம உரிமை சமுதாயமொன்று இந்த நாட்டிலே நிகழ்ந்து எல்லோரும் இலங்கையர் என்கின்ற ஒரு உறவு இந்த நாட்டிலே நிலைத்திடும்.

அந்தநாள் வரும்போது எமது செல்வங்கள் நாங்கள் பட்ட கஷ்டங்களைப் படாது நீங்கள் ஒரு சிறந்த நாட்டிலே வாழ்கின்ற ஒரு சிறந்த சூழ்நிலை ஏற்பட வேண்டும் அந்த ஏற்பாட்டிற்கு அரசியல் தலைமைகள் உழைத்திட வேண்டும் எங்களுடைய கடவுகளின் கருணை இந்த தீவிலே நிலைத்திட வேண்டும்´ என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: