1 Mar 2015

அனர்த்தங்கள் வருமுன்னரே அதனை எதிர் கொள்ள மக்கள் தயாராதல் வேண்டும் - மட்டு செஞ்சிலுவைத் தலைவர்.

SHARE
இயற்கை அனர்த்தங்கள் எங்கேயும் எந்தநேரத்திலும் ஏற்படலாம். அதன்போது சொத்திழப்புக்கள் மட்டுமல்லாது உயிரிழப்புக்களும் ஏறப்டுவதுண்டு. ஆனால் அவ்வாறு ஏற்படுகின்ற இழப்புக்களை குறைத்துக் கொள்ள வழிகள் பல உள்ளன. அவ்வழிகளை மக்கள் அறிந்து கொள்ளவும் ஏற்ற பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளவும் மக்கள் முன்வருதல் வேண்டும்.

என இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் தலைவர் த.வசந்தராஜா தெரிவித்தார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மண்முனை வடக்கு பிரிவினால் நாவற்குடா கிழக்கில் செஞ்சிலுவை அலகோன்றை சனிக்கிழமை மாலை (28) அங்குரார்ப்பனம் செய்து வைக்கின்ற நிகழ்வில் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுமு;போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

வெள்ளம், சுனாமி, சூறாவளி போன்ற அபாயங்கள் மக்கள் வாழும் பிரதேசங்களை தாக்குவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அதற்கு முகம் கொடுப்பதற்கு மக்கள் முன்கூட்டியே தயாராக இருப்பதன் மூலம் விளையும் பாதிப்புக்களையும் இழப்புக்களையும் தவிர்த்துக் கொள்ள அல்லது குறைத்துக் கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே பதினான்கு பிரதேச செயலக பிரிவுகளிலே ஒன்பது பிரிவுகளில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதேச பிரிவுகள் இயங்கி வருகின்றன. ஏனைய ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதேச பிரிவுகளை அமைப்பதற்கு மக்கள் முன்வருதல் வேண்டும். பிரதேச பிரிவுகளிலே ஒவ்வொரு கிராமத்திலும் செஞ்சிலுவை அலகுகள் செயற்பட முடியும். அவ் அலகுகளின் மூலமாக மக்கள் பல்வேறு பயன்களைப் பெற்றுக் கொள்ள முடியும் விஷேடமாக அனர்த்த முன்னாயத்தப் பயிற்சிகள், முதலுதவிப் பயிற்சிகள், மற்றும் தலைமைத்துவப் பயிற்சிகள் முதலான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அதன் அடிப்படையில்த்தான் மக்களின் கோரிக்கையின் பேரில் நாவற்குடா கிழக்கு செஞ்சிலுவை அலகு தற்போது ஆரம்பித்து வைக்கப்படுகிறது. என அவர் தெரிவித்தார்.

மண்முனை வடக்கு செஞ்சிலுவைப் பிரிவின் தலைவர் ஆர்.பிரகாஷ் தலைமை நடைபெற்ற இந்நிகழ்வில் நாவற்குடா கிழக்கு செஞ்சிலுவை அலகிற்குரிய நடப்பு வருடத்துக்கான  செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது. தலைவராக தொழிற்பயிற்சி ஆசிரியை சிவலிங்கம் யோகராணி, செயலாளராக பரமானந்தம் பாக்கியவதி, பொருளாளராக அருணாகரன் இராசலெட்சுமி ஆகியோருடன் ஐந்து செயற்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.










SHARE

Author: verified_user

0 Comments: