6 Feb 2015

மட்டு நகர் வேளாண்மையினை முன்னிட்டு வன விலங்குகள் திணைக்களத்தினால் விசேட கூட்டம்

SHARE
வேளாண்மை அறுவடை நடைபெற்று வருவதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் அட்டகாசம் அதிகமாகவுள்ள போரதீவு பற்று, மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர் பற்று, கோரளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வன விலங்குகள் திணைக்களத்தினரின் விசேட கடமைகளை மேற்கொள்வதென முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு அம் பாறை மாவட்டங்களுக்கான பொறுப்பதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகள், பிரதேச செயலாளர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கிடையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், க.துரைராஜசிங்கம், இ.பிரசன்னா, ஞா.கிருஸ்ணப்பிள்ளை, ம.நடராஜா உள்ளிட்ட அரசியல்வாதிகளும் கலந்து கொண்டனர்.

அதே நேரம், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு அம் பாறை மாவட்டங்களுக்கான பொறுப்பதிகாரி டி.எம்.அஜித் வசந்தகுமார, பிரதேச செயலாளர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள், கால்நடைப் பண்ணையாளர்கள், இராணுவ மற்றும், பொலிஸ் பொறுப்பதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலின் போது முக்கியமாக கடந்த 27ஆம் திகதி மாதவணைப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு தெகியத்தகண்டி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ள கால்நடைப் பண்ணையாளர்களது பிரச்சினைகள் எடுத்துக் கொள்ளப்பட்ட போதும் அதற்குச் சாதகமான ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

அதே நேரம், யானைகளின் பிரச்சினைகள் உள்ள பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தின் விசேட நடவடிக்கைகளும் மேற்கொள்வது என்று முடிவு காணப்பட்டது. மட்டக்களப்பில் நீண்டகாலமாக இருந்து வரும் யானைத் தொல்லையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மாற்று வழிகள் தேடப்பட்ட போதும் இதுவரையில் எந்தவிதமான சாதகமான தீர்வுகளும் கிடைக்கவில்லை என்பதும் பல்வேறு பிரச்சினைகள் மக்களுக்கும் தொடர்ந்த வண்ணமிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
wild life 2
wild life 2
SHARE

Author: verified_user

0 Comments: