9 Feb 2015

தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க கிறிஸ்தவ தேவாலயமான தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.

கடந்த 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த ஆலயத்தின் திருவிழாவில் கடந்த சனிக்கிழமை 07 ஆம் திகதி மாலை காணிக்கை மாதாவின் திருச்சொரூப பவனி சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான அடியார்கள் புடை சூழ அன்னையின் அலங்கரிக்கப்பட்ட திருச்சொரூபம் பவனியாக கொண்டுசெல்லப்பட்டது.

புனித காணிக்கை மாதா ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை அலெக்ஸ் ரொபர்ட்வினால் திருவிழா வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்ததுடன் நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை (08)  காலை திருவிழாவின் இறுதி நாள் திருவிழாவில் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான ஆயர் அருட்திரு பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் இந்த திருவிழா கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது. இதன்போது அடியார்களுக்கு ஆயரினால் ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன் நீடித்த சமாதானம் வேண்டியும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டியும் விசேட பூஜையும் நடத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து திருச்சொரூபம் கொண்டுசெல்லப்பட்டு ஆலய பங்குத்தந்தையினால் கொடியிறக்கம் செய்யப்பட்டது. இந்த உற்சவத்தில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டதுடன் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.
SHARE

Author: verified_user

0 Comments: