உண்மையில் ஒருவருக்கு அறம் என்பது இருக்க வேண்டும், அறம் இருந்தால்தான் அவருக்கு ஆன்மீகம் வளரும், ஆன்மீகம் வளர்ந்தால்தான் நாங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியும், ஆனால் ஆன்மீகம் மட்டும் வளர்ந்தால் போதாது அரசியலிலும் வளர்ச்சியடைய வேண்டும். ஏன் இதனை நான் கூறுகின்றேன் என்றால் தமிழராகிய நாங்கள் ஆன்மீகம், அரசியல், சமூகம் சார்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். அதுமாத்திரமின்றி ஆன்மீகமும் அரசியலும் இரண்டறக்கலந்து இருக்கின்றது. இதற்கு உதாரணமாக கடந்த அரசியலிலே ஆன்மீக வாதிகள் அரசியல்வாதிகளாக இருந்தார்கள்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்ளப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையம் சிவனாலயத்தின் பவழ விழாவை முன்னிட்டு “ஆனந்த கிரி” எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக் கிழமை (08) மாலை செட்டிபாளையம் சிவனாலய முன்றலில் நடைபெற்றது.
செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சங்கத்தின் தலைவர் சீ.நாகலிங்கம் தலைமயில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்….
இந்த நாட்டிலே கடந்த காலத்தில் கொடுர ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஆன்மீகவாதிகள் இன்னொரு ஆன்மீகவாதியை தாக்குகின்றவர்களாக இருந்தார்கள் என்பதனை மறந்திருக்கமாட்டீர்கள் என நான் நினைக்கின்றேன்.
தற்பொழுது பார்த்தால் நாங்கள் கலை பண்பாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். ஆனால் இவற்றினை நாங்கள் நடாத்துவதாக இருந்தால் நிலம் வேண்டும், அவற்றையும் காப்பாற்ற வேண்டும், இவற்றை காப்பாற்றுவதாக இருந்தால் எங்களுக்கு அரசியல் பலம் வேண்டும். இந்த அரசியல் பலத்தினை யாரிடம் இருந்து பெறவேண்டும் என்பதனை நாங்கள் தெரிவு செய்து கொள்ள வேண்டும். தெரிவு செய்யும் அரசியல் பலம் எமது மொழி, கலை, கலாசாரம், இவற்றுக்குமேலாக எமது இனத்தினை பாதுகாக்கின்ற பலமாக இருக்க வேணடும்.
நாங்கள் அகிம்சை ரீதியாக ஆயுதரீதியாக, இனத்தின் விடுதலைக்காக. அறுபது வருடகாலம் போராடி இன்றும் விடுதலை இல்லாத இனமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அகிம்சை ரீதியான போராட்டத்திலும், ஆயுதரீதியான போராட்டத்திலும், நாங்கள் இலட்சக்கணக்கான மக்களையும், நாற்பதாயிரம் மாவீரர்களையும் இதற்காக ஆகுதியாக்கி இருக்கின்றோம்.
ஆனால் விடுதலை எங்களுக்கு கிடைக்கவில்லை, 2009 ஆண்டிற்கு பிற்பட்ட காலப் பகுதியிலே அரசியல் பலத்தினை நிங்கள் தக்கவைக்க வில்லை என்று சொன்னால் எமது தாந்தாமலை ஆலயம் புத்தர் கோவிலாக மாறியிருக்கும். இவ்வாறான விடயங்களை தடுத்து நிறுத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான். இதனால்தான் கூறுகின்றேன், எமது நிறுவனங்கள் அனைத்தும் அரசியலையும் அனுசரித்து செல்ல வேண்டும்.
உதாரணமாக வடக்கு மாகாணம் என்பது முற்றுமுழுதாக 99 வீதம் தமிழர் வாழும் பிரதேசம் என்பதுடன் அங்கு சைவர்களும், கிறிஸ்தவர்களும். வாழ்ந்து கொண்டு இருக்கின்ற மாகாணமாக காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தை எடுத்துக் கொண்டால் மூன்று இனமக்களும் வாழுகின்ற ஒரு பிரதேசமாகும். கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே நாங்கள் விட்ட தவறு காரணமாக அப்போது நாங்கள் ஆட்சி அதிகாரத்தினை தவறவிட்டிருந்தோம். இதனால் தற்பொழுது திண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இது யார் விட்ட தவறு? தவறை விட்டு விட்டு, ஆட்சி அமைப்பது பற்றி குற்றங்கூறுகின்றமை தவறான விடயமாக பார்க்க வேண்டியள்ளது.
கிழக்கு மாகாணசபை ஆட்சி அமைக்கும் விடயத்தில் மைத்திரியை ஆதரித்ததனால் அவரிடமோ அல்லது ரணிலிடமோ சென்று கதைத்து தீர்வினை பெறுங்கள் என்று பலர் கூறுகின்றனர். இதில் பிரச்சினை இருக்கின்றது. காரணம் கிழக்கு மாகாண சபையில் இருக்கின்ற கட்சிகள் அனைத்தும் மைத்திரியை ஆதரித்த கட்சிகள். இவர்கள் அனைவரும் சென்று மைத்திரியுடன் கதைத்தால் முதலமைச்சர் பதவியினை கேட்டால் மைத்திரி யாருக்கு தீர்வு கொடுப்பார் என சிந்தித்து பாருங்கள். இதுதான் கிழக்கு மாகாண சபையில் பிரச்சினை இதனால்தான் எமது தலைவர் நிதானமாக சிந்தித்து முஸ்லிம் காங்கரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முதலமைச்சர் பதவியினை கோரியிருந்தார். ஆனால் முஸ்லிம் காங்கரஸ் எமக்கு இரண்டாம் தடவையாகவும் துரோகம் இழைத்துள்ளது எனக் கூற வேண்டியுள்ளது என மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment