20 Feb 2015

சந்தையை கலக்க வருகிறது தக்காளி ரோபோ

SHARE
கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்ச் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது.

´டொமாடன்´ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் தலை தக்காளியை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இரும்பு கரங்கள் கொண்ட இந்த ரோபோ தயாரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன தெரியுமா?

மாரத்தான் போன்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் வழக்கமாக தங்கள் உடல் ஆற்றலை அதிகரித்துக்கொள்ள ஓடிக்கொண்டே ஏதாவது சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் நேரம் வீணாவது மட்டுமின்றி, அடிக்கடி ஆற்றல் நிறைந்த உணவுப்பொருள்களையும் எடுத்துக்கொள்ள முடியாது.

இந்நிலையில், வீரர்களின் கழுத்து பகுதியில் பொருத்தப்படும் இந்த ரோபோ தன் சேமிப்பில் இருக்கும் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்ட தக்காளியை தன் இரும்புக்கரத்தால் எடுத்து ஓடுபவரின் வாய்க்கு அருகே கொண்டு வரும்.

இதனால் அதை சாப்பிட்டுக்கொண்டே ஒருவர் இன்னும் அதிக ஆற்றலுடன் தொடர்ந்து ஓட முடியும்.

ஜப்பானில் 22-ம் திகதி நடைபெறும் பிரம்மாண்ட மாரத்தானில் பங்கேற்பதற்காக பழச்சாறு நிறுவனம் ஒன்று இதை வடிவமைத்துள்ளது.

இந்த மாரத்தானிற்கு முன்னோட்டமாக நாளை நடைபெறும் 5 கி.மீ தூரத்திற்கான ஓட்டத்தில் அந்நிறுவனத்தின் ஊழியர் சுசுகி இந்த டொமாடனுடன் (8 கிலோ) கலந்து கொள்கிறார்.

பின்னர் மறுநாள் நடைபெறும் மாரத்தானிலும் எடை குறைந்த டொமாடனுடன் (3 கிலோ) கலந்து கொண்டு ஓட இருக்கிறார். சுசுகிக்கு ‘டொமாடன்’ எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
SHARE

Author: verified_user

0 Comments: