20 Feb 2015

சம்பந்தனின் கேள்விகளுக்கு மு.கா பதில்

SHARE
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மற்றவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு பலியாகாமல், முஸ்லிம் மக்களை அரவணைக்கும் உண்மையான அரசியலை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், அவ்வாறான ஒரு நிலையில் இணைந்து வர தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆற்றிய உரை குறித்து விடுத்துள்ள பகிரங்க மடலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண முதலமைச்சர் நியமனம் தொடர்பிலும் நியமனத்திற்குப் பின்னரான சூழ்நிலைகள் தொடர்பிலும் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளிப்படையாகவே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமையையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

அண்மைய நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிரான காட்டமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

அண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கட்சிக் கொள்கை விளக்க பேருரையை நிகழ்த்தும் போது, பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

01) 2012ம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு முதலமைச்சர் உள்ளிட்ட பல விட்டுக் கொடுப்போடு கிழக்கில் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸை அழைத்த போது, அதை ஏற்றுக் கொள்ளாத முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைத்தது.

02) நான் (இரா. சும்மந்தன் ஐயா) றவூப் ஹக்கீமுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க வேண்டும் என்ற போது, அவர் பதில் தரவில்லை.

3) முதலமைச்சர் பதவியை அவர்கள் தலைமையில் பெற விரும்பவில்லை.

4) எந்த முஸ்லிம் தலைவர்கள் உரிமைக்காக அர்ப்பணிப்பு செய்திருக்கிறார்கள்.

05) மொழி சம்மந்தமான போராட்டங்களில் நீங்கள் பங்கு பற்றினீர்களா?

06) காணி பறிபோனபோது மீள் குடியேற்றம் சம்மந்தமாக நாங்கள் போராடிய போது, நீங்கள் பங்கு பற்றினீர்களா?

07) அதிகாரப் பகிர்வு கேட்டபோது நீங்கள் பங்கு பற்றினீர்களா?

மேற்சொன்ன குற்றச்சாட்டுகளுக்கும் வினாக்களுக்கும் சுருக்கமான பதிலைத் தருவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

2012ம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்போடு இணைந்து ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலைகளை மிகக் கவனமாக ஆராய்ந்த பின்னரே கூட்டமைப்போடு இணைந்து ஆட்சி அமைப்பதில்லை என்ற முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்தது.

தென்னிலங்கை முஸ்லிம்களுக்கெதிராக வன்முறைகளை கட்டவிழ்க்க தொடங்கியிருந்த சூழ்நிலையில் அன்றைய ஆளுந்தரப்போடு எதிர்ப்பரசியல் செய்வதை விடுத்து இணக்க அரசியலே சாத்தியமானது என்ற முடிவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வந்தது.

அத்துடன் சிங்கள தலைவர்கள் தொடர்பிலும், இலங்கை இராணுவம் தொடர்பிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள கடும் நிலைப்பாட்டோடு இணைந்து பயணிப்பதில் முஸ்லிம் காங்கிரஸூக்கு பல சங்கடங்கள் உள்ளன.

கடந்த காலங்களில் முஸ்லிம் மக்கள் தொடர்பான நல்லெண்ன சமிக்ஞைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயல் ரீதியாக எதையும் காட்டவில்லை வாய்ப் பேச்சு விற்பனர்களாகவே உள்ளனர்.

முஸ்லிம்களை ஒதுக்கி ஓரம் கட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கும் பல நடவடிக்கைகளை எம்மால் பட்டியலிட்டுக் காட்ட முடியும் எனது மறு கட்டுரையில் அந்த விடயங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்படும்.

மதிப்புக்குரிய ஐயா அவர்களின் இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள்.

இது முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு நன்றாக தெரிந்த விடயமும் கூட, கடந்த அரசை மாற்றுவதற்கான பல முயற்சிகளில் முஸ்லிம் காங்கிரஸ் பலரோடு இணைந்து செயற்பட்டு வந்தது.

தம்புள்ள பள்ளிவாயலில் கைவைத்த நாள் முதல் கடந்த அரசையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக மறை முகமாக பாடுபட்டு வந்தது.

மத்திய ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலைக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் காத்திருந்தது. பொது வேட்பாளராக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவை விட வேறொருவர் பொது வேட்பாளராக வருவதன் மூலமே மஹிந்தவை தோற்கடிக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது, அது தொடர்பில் மகிழ்ச்சி அடைந்தவர்களில் முதன்மையானவர் ரவூப் ஹக்கீம்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒரு பலமான அணியும் முஸ்லிம் காங்கிரஸூக்குள் அப்போது இருந்தது. ஆக ஒட்டு மொத்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்களையும் மைத்திரியை ஆதரிக்க வைப்பதற்கான உச்சகட்ட காய் நகர்த்தலிலேயே ரவூப் ஹக்கீம் ஈடுபட்டிருந்தார்.

ஈற்றில் மொத்தமாக முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியை ஆதரித்தது குறுகிய நாட்களுக்குள் முழு வீச்சுடன் மின்னல் வேகத்தில் ஆதரவு திரட்டும் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டதும் தாங்கள் அறியாததல்ல.

முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்ததன் பின்னரான இரண்டு நாட்களின் பின்பே தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரயை ஆதரிப்பதாக அறிவித்தது இங்கு கவனிக்கத்தக்கது.

நாங்கள் தான் முந்தி வந்தோம் என சிறு பிள்ளைத் தனமாக கருத்துச் சொல்லும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போல் நீங்கள் சொல்லலாமா ஐயா!

முதலமைச்சர் பதவியை அவர்கள் தலைமையில் பெற விரும்பவில்லை என தாங்கள் கூறும் கூற்றுத் தொடர்பில் நோக்கும் போது, முஸ்லிம் காங்கிரஸூக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கும் மக்கள் ஆதரவு தளம் தொடர்பில் உங்கள் மனநிலையில் முரணான கருத்து உள்ளதை புரியக் கூடிதாகவுள்ளது.

அப்படியானால் முஸ்லிம் காங்கிரஸூக்கு கிழக்கு மாகாணத்தில் இருக்கும் ஆதரவை நீங்கள் மறுக்கின்றீர்களா? அப்படியாயின் முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸைப் போன்ற அரசியல் பலம் கொண்ட மாற்று அரசியல் சக்தி ஒன்று உள்ளதா? இல்லையாயின் ஒரு புதிய முஸ்லிம் அரசியல் சக்தியை நீங்கள் வளர்க்க முயற்சிக்கின்றீர்களா? உங்களது கட்சியின் அண்மைய செயற்பாடுகள் அவ்வாறுதான் உள்ளன, மன்னித்துக் கொள்ளுங்கள்.

தங்களது மற்றொரு குற்றச்சாட்டு எந்த முஸ்லிம் தலைவர்கள் உரிமைக்காக அர்ப்பணிப்பு செய்திருக்கிறார்கள் என்ற கூற்றின் மூலம் வட, கிழக்கு முஸ்லிம் மக்களின் கடந்த கால பல்வேறு உயிர் தியாகங்களையும் சொத்தழிவுகளையும் முற்று முழுதாக நீங்கள் மறுத்திருப்பது மிகப் பெரும் கவலையை எம்முள் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை சமாதான வழியில் கொண்டு வந்து தமிழ் மக்களுக்கான நிம்மதியான வாழ்கையை உறுதிப்படுத்த அளப்பெரும் முயற்சிகளை செய்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மர்ஹூம் ACS ஹமீத் அவர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் தங்களக்கு மறந்து போயிருக்கமாட்டாது.

சமாதான தேவதையாக ஆட்சி பீடமேறிய சந்திரிக்கா அம்மையாரின் இனப்பிரச்சினைக்கான தீர்வை பாராளுமன்றத்தில் முன்மொழிந்து உரையாற்ற எந்த சிங்கள தலைவனுக்கும் தமிழ் தலைவனுக்கும் திராணி இல்லாமல் இருந்தபோது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் தலைவர் அஷ்ரப் அந்த சமாதான தீர்வுத் திட்டத்தை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாராளுமன்றத்தில் சுமார் எட்டு மணிநேரம் முன் மொழிந்து உரையாற்றினாரே இனவாதிகளின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் உள்ளாகினாரே இது அர்ப்பணிப்பு இல்லையா?

காணிப்பிரச்சினை, மொழிப்பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாக குரல் எழுப்பியே வருகிறோம். கடந்த கிழக்கு மாகாண சபையில் நான் (கட்டுரையாளன்) கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினை தொடர்பில் தனி நபர் பிரேரனையை சமர்ப்பித்திருந்தேன்.

எமது கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி, பாராளுமன்றத்தில் பிரேரனை சமர்ப்பித்திருந்தார். இன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு காணி கிடைக்காமல் தடுப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை இவ்விடத்தில் உறுதியாக தெரிவிக்கிறேன்.

இவ்விடயம் தொடர்பில் நேரம் தந்தால் உங்களோடு நேரில் பேச ஆயத்தமாக இருக்கிறேன்.

ஐயா அவர்களே! உங்களை மிகவும் மதிக்கிறோம். மற்றவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு நீங்கள் பலியாக வேண்டாம். நீங்கள் ஒரு யதார்த்தமான தலைவர், முஸ்லிம் மக்களை அரவணைக்கும் உண்மையான அரசியலை முன்னெடுங்கள். உங்களோடு இணைந்து வர ஆயத்தமாக உள்ளோம்.
SHARE

Author: verified_user

0 Comments: