அதிபர் இடமாறறலாகிச் சென்று ஐந்து மாதகாலமாகியும் இன்னமும் நிரந்தர
அதிபர் நியமிக்கப்படாமல் சீரழியும் சின்னவத்தை அ.த.க.பாடசாலைக்கு உடனடியாக
அதிபரொருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பட்டிருப்பு வலயக்கல்விப்
பணிப்பாளரிடம் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பட்டிருப்பு வலய செயலாளர்
சுப்பிரமணியம் கமலேஸ்வரன் நேரில் சென்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரஸ்தாப பாடசாலையிலிருந்த அதிபர் மனோகரன் கடந்த வருடம் செப்டம்பர்
மாதம் இடமாற்றப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை அப்பாடசாலைக்கு அதிபர்
ஒருவர் நியமிக்கப்படவுமில்லை. பதிலுக்கு ஒரு ஆசிரியரைத் தானும்
நியமிக்கவில்லை.
இதனால் அங்குள்ள ஏனைய ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய தலைமையின்றி பல நிருவாகச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
தற்காலிகமாவது அங்குள்ள சிரேஸ்ட ஆசிரியரொருவரை அதிபராக நியமிக்குமாறு
முன்பு கேட்டிருந்தோம். அதற்கும் பணிப்பாளர் செவிசாய்க்கவில்லை. கடந்த 5
மாத காலத்தில் ஆசிரியர்கள் லீவு எடுப்பது அங்கு விசித்திரமான நடைமுறை.
வலயக்கல்விப் பணிப்பாளரால் நியமிக்கப்படும் அதிபருக்கு என மகுடமிட்டு
லீவுக் கடிதத்தை அதிபருக்கான மேசையில் வைத்து விட்டுச் செல்வது. தேவையா?
வலயத்தில் தரம்பெற்ற அதிபர்களுள்ளனர். அந்தப் பாடசாலையில் சிரேஸ்ட
ஆசிரியர்களுள்ளனர். அவர்களில் ஒருவரையாவது தற்காலிகமாக நியமித்திருக்கலாம்.
ஆனால் எதுவுமே இல்லாமல் அதிபரின்றி இப்பாடசாலை நிருவாகம் சீரழிந்து
வருகிறது.
இதனை மாகாண கல்வி நிருவாகமும் அனுமதித்துளளதா? பல தடவைகள் இப்பாடசாலை
பற்றி பணிப்பாளரிடமும் செயலாளரிடமும் முறையிட்டிருந்தோம். சுற்று
நிருபங்களை மாத்திரம் அனுப்புகிறார்கள்.
இதேவேளை மாற்றலாகிச் சென்ற மனோகரன் அதிபருக்கு இன்னமும் முற்றாக
விடுவிப்பு வழங்கப்படவில்லை. அவருக்கான சம்பளம் இதேபாடசாலையில் தான்
கிடைக்கிறது. அவர் தற்சமயம் அதிபராக பணியாற்றும் கல்லாறு அருளானந்தம்
பாடசாலையில் பேரளிவில் தான் இருக்கிறார். இதுதான் பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனை நிருவாகத்தின் இலட்சணம். என்றார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பட்டிருப்பு வலய செயலாளர்
சுப்பிரமணியம் கமலேஸ்வரன்.
0 Comments:
Post a Comment