3 Feb 2015

கிளிநொச்சியில் கண்ணீருடன் திரண்ட காணாமல்போனோரின் உறவுகள்! ஜனாதிபதிக்கு மகஜர்

SHARE
காணாமல் போனோரின் உறவினர்களால் இன்று காலை கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. 

கடந்த பல ஆண்டுகளாக சிறிலங்கா அரசாங்கங்கள் மற்றும் ஒட்டுக்குழுக்களின் போர், வெள்ளை வான்கடத்தல்கள், முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற பெரும்போர் என்பவற்றின்போது கடத்தப்பட்டும் காணாமல் போயும், 

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயும் உள்ள உறவுகளின் உறவுகளும் பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் சொந்தங்களும் இன்று கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோரின் உறவுகளின் அமைப்பு ஏற்பாடு செய்த இதில் பெருமளவான காணாமல் போனவர்களின் உறவுகளும் சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளின் உறவுகளும் கலந்துகொண்டு கண்ணீர் சிந்தி தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். 

பெரும்பாலான கோசங்கள் மாற்றத்திற்கான புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை நோக்கியே எழுப்பப்பட்டுள்ளது. 

புதிய ஜனாதிபதி தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து தமக்கு நிம்மதியான வாழ்வுக்கான தீர்வை தருவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே காணாமல் போன உறவுகளின் நம்பிக்கை குரல்கள் இடம்பெற்றிருந்தன.
கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக ஒன்று திரண்டவர்கள் பின்பு கிளிநொச்சி மாவட்ட அரசசெயலகத்தை நோக்கிச்சென்று அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத்த மகஜரை வாசித்து, ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்ததுடன் வடமகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரனுக்கான மகஜரை பா.உறுப்பினர் சி.சிறீதரனிடம் கையளித்தனர். 

இன்றைய கவனயீர்பு போராட்டத்தில் பெருமளவான உறவுகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், மன்னார் பிரஜைகள் குழு பிரதிநிதிகள், மாந்தை கிழக்கு உப தவிசாளர் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: