10 Feb 2015

கிழக்கு மாகாண சபையை பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்து ஆட்சியமைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தேன் - கிருஸ்ணபிள்ளை

SHARE
எனக்கு வாக்களித்த தமிழ் மக்களின் வேண்டு கோளை நிறைவேற்றுவதன் அடையாளமாகவே நான் மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள வில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளி மலை) தெரிவித்தார்.

கடந்த 2 மாத காலமாக இழுபறி நிலையில் இருந்த கிழக்கு மாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கரசுடன் இணைந்து ஆட்சியமைத்திருக்கின்றது. இந்நிலையில்  செவ்வாய்க் கிழமை (10) நடைபெற்ற கிழக்கு மாகாணசபை அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளி மலை) கலந்து கொள்ள வில்லை.

இவ்விடையம் குறித்து செவ்வாய் கிழமை மாலை அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 இதன் போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

தமிழ் தேசியத் தலைவர்களிடம் நான் முன்வைத்தது என்னவெனில்….
தமிழினத்திற்கு கிழக்கு மாகாணத்தில் முதலமைச்சர் ஆகுவதற்கு  ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது, அதனை தகுந்த முறையில் பயன்படுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அதாவது இந்த நாட்டின் ஐனாதிபதி, பிரதமர் அகியோருடன் கதைத்து இலங்கையில் புதிய அரசாங்கத்தினை உருவாக்கியவர்கள் நாங்கள் என்ற அடிப்படையில் எமக்கு உரித்தான இந்த கிழக்கு முதலமைச்சு பதவியினை பெற்று கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும். அதற்குரிய கைங்கரியங்களை எந்த வகையில் மேற்கொள்ள வேண்டுமோ அந்தவகையில் மேற்கொள்ளுங்கள் என்று பணிந்து நின்றேன்.

கிழக்கு மாகாண மக்களின் கடந்தகால வாழ்க்கையினை புரட்டிப் பார்த்தால் பெரும்பான்மை இனத்தவரை விட சிறுபான்மையினத்தவர்கள் மத்தியில்தான்,  கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிப்புக்களும், அனியாயங்களும் நடந்தேறியதை உலகமே அறியும்.

ஆகவே தமிழ் தலைவர்கள் முதலமைச்சர் பதவியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது பெரும்பான்மை இனத்துடன் சேர்ந்து ஆட்சியமைக்க வழிவகை செய்ய வேண்டும்.  அதில்  நான் குறிப்பிட்ட விடயம் முதலமைச்சர் தமிழராக இருக்க வேண்டும். அல்லது மூன்று அமைச்சு பதவியை பெற வேண்டும் இந்த கோரிக்கையை நான் தமிழ் தலைவர்களிடம் எனக்கு வாக்களித்த மக்களின் அபிலாசைகளுக்கமைவாக கூறியிருந்தேன்.

நான் முஸ்லிம் காங்கரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கூடாது எனக் கூறுவதற்கான காரணம். கிழக்கு மாகாணத்தில் கடந்த இரண்டரை வருட ஆட்சியில் இருந்தவர்கள் அக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள தாந்தமலை, உன்னிச்சை, கரடியனாறு, கித்துள், கோப்பாவெளி போன்ற சிறிய கிராமங்களுக்குக்கூட சாதாரண சிற்றூளியர் நியமானங் கூட வழங்காகத, அவ்வாறானவர்களோடு சேர்ந்து ஆட்சி அமைப்பதை நான் மட்டுமல்ல என்னோடு சேர்ந்த சக மாகாண சபை உறுப்பினர்களும், கிழக்குவாழ் நூறுவீதமான தமிழ் மக்களும் அனுபவித்த துன்பங்கள் போது எனவும், அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கக் கூடாது எனவும், ஆணித்தரமாக கூறியிருந்தனர்.

என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது எமது தமிழ் மக்கள்தான். எனவே அந்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய தேவை மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்குள்ளது.  அந்த வகையில் தமிழ் மக்களின் நிலைப்பாடு அன்றும் ஏமாந்தோம்! இன்றும் ஏமாந்தோம்! மேலும் ஏமாறுவோம்! என்ற நிலைக்கு அமைவாக கிழக்கு மாகாண ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. என நான் உணர்கின்றேன்.

எதிர்காலத்திலாவது தேசியத்தை நம்புகின்ற தமழ் மக்களை வாழ வைக்க வழி செய்ய வேண்டும். என தமிழ் தலைவர்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். இதன் காரணமாகவே நான் தமிழ் மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அதனை நிறைவேற்றுவதன் அடையாளமாகவே செவ்வாய் கிழமை (10) புதிய முதலமைச்சர் பதவியேற்கும் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்ள வில்லை என அவர் மேலும் தெரிவித்தார்;;;;;…
SHARE

Author: verified_user

0 Comments: