24 Feb 2015

பங்களாதேஷ் படகு விபத்தில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

SHARE
பங்களாதேஷத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இதுவரை 41  பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பெண்கள் உட்பட 200 பேருடன் சென்றுகொண்டிருந்த படகுடன் சரக்குப் படகு ஒன்று மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் பச்சிளம் குழந்தை, சிறுவர்கள், பெண்கள் உட்பட இதுவரையில் 41 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, பலர் காணாமற் போயுள்ளனர். விபத்தைத் தொடர்ந்து, சரக்குப் படகை காவற்துறையினர் பறிமுதல் செய்த நிலையில், அதிலிருந்த அதிகாரிகளையும் கைது செய்துள்ளனர். 

ராஜபரி பகுதியின் தவ்லத்டியா - பட்டுரியா பகுதியின் அருகே வந்த சரக்கு படகு மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் டாக்கா நகரத்துக்கு வடமேற்கு பகுதியில் 40 கிலோ மீற்றர் தொலைவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஊடகங்கள் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது 100 அல்லது 150 பேருடன் செல்ல வேண்டிய படகில் அளவுக்கு அதிகமாக 200 பேரை ஏற்றிச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறு குழந்தைகள் உட்பட 11 பெண்கள் இவ்விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஆறு மாதமேயான ஒரு பெண் குழந்தையும் அடங்குவதாக டெய்லி ஸ்ரார் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்ககூடும்  எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இம்மாதம் 13 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, கடந்த ஆண்டு பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 130 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
SHARE

Author: verified_user

0 Comments: