20 Feb 2015

மனைவியை காப்பாற்ற 147 முறை ரத்த தானம் செய்த தெய்வீக கணவர்

SHARE
சீனாவின் வட கிழக்கு ஜிலின் மாகாணம் அருகே வசிப்பவர் க்சூ வென்வூ. இவரது மனைவி வாங் க்சியோயிங். கடந்த 2003 ஆம் ஆண்டு தனது கணவரின் கண்ணெதிரே திடீரென கீழே விழுந்தார் வாங்.

உடனடியாக தனது அன்பு மனைவியை மருத்துவரிடம் அழைத்து சென்றார் வென்வூ. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் வாங்க்கு ரத்த சோகை நோய் இருப்பது தெரியவந்தது. இதனால் வாங்கின் கையும் செயலிழந்தது. இரும்பு சத்து குறைவால் ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் உருவாக்கும் தகுதியை அவரது உடல் இழந்தது. இதையடுத்து அடிக்கடி ரத்தத்தை மாற்றினால் தான் அவரால் தொடர்ந்து உயிருடன் நடமாட முடியும் என்று மருத்துவர்கள் கூறினர்.

மனைவிக்காக தனது ரத்தத்தை தர முன் வந்தார் வென்வூ. ஆனால் வென்வூவின் ரத்தமும் வாங்கின் ரத்தமும் வெவ்வேறாக இருந்தது. ஆனால் சீனா அரசு ஒரு அருமையான சட்டத்தை இயற்றியுள்ளது. அதாவது அந்நாட்டு சட்டப்படி தனது உறவினர்களுக்கு இலவசமாக ரத்த தானம் பெற, தனது ரத்தத்தை ஒருவர் தானம் செய்யவேண்டும் என்பது தான் அது. அந்த சட்டத்தின் படி கடந்த 10 வருடங்களில் 147 முறை தனது ரத்தத்தை தானம் தந்துள்ளார் வென்வூ. அதாவது ஒரு வருடத்துக்கு சராசரியாக 15 முறை ரத்த தானம் செய்துள்ளார் அவர்
ஆண்டுக்கு 4 முறை மட்டுமே ரத்த தானம் செய்ய வேண்டும் என்று தேசிய சுகாதார மையம் பரிந்துரைத்துள்ள நிலையில், அதை போல் 4 மடங்கு ரத்தத்தை தானம் செய்துள்ளார் வென்வூ. தான் ரத்த தானம் செய்வது குறித்து வென்வூ கூறுகையில், நான் ஒன்றே ஒன்றை தான் விரும்புகிறேன். எங்களது வாழ்நாள் முடியும் வரை, எனது மனைவி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம் என்று கண்ணீர் மல்க கூறினார்.

எங்களுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது. எனினும் மனதை தேற்றிக்கொண்டு எனக்கு அவள், அவளுக்கு நான் என வாழ்ந்து வந்தோம். அதன் பிறகும் எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியை குலைக்கும் வகையில் அவளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டது என்று மிகுந்த மன வருத்தத்துடன் கூறினார். நான் தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவதால் எனது உடல்நிலையும் பலவீனமடைந்து வருகிறது. எனினும் நான் உயிருடன் இருக்கும் வரை எனது மனைவியின் உயிருக்காக தொடர்ந்து ரத்த தானம் செய்து கொண்டே இருப்பேன். எனது உயிரை பற்றி கவலைப்படமாட்டேன் என்று உறுதிபட தெரிவித்தார்.

இல்லற வாழ்வில் தன்னுடன் பங்கு கொண்ட மனைவியின் நலனுக்காக, தனது நலனை கூட கவனத்தில் கொள்ளாமல் செயல்படும் வென்வூவை தெய்வீக கணவர் என்று கூறுவது தானே பொருத்தமாக இருக்கும்.

SHARE

Author: verified_user

0 Comments: