எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு செல்லாமல் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை இன்று வரை வகித்த முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் முன்னேற்றத்திற்காக அளப்பரிய சேவை
ஆற்றியிருந்தார்.
1968 ஆம் ஆண்டு பெலியத்த தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
அமைப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்ட அவர் இரண்டு வருடங்களின் பின்னர்
பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்.
அப்போதைய இளைய பாராளுமன்ற உறுப்பினராகவும் அவர் திகழ்ந்தார்.
அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்ஸ நாட்டிற்கு சேவையாற்றினார்.
2009 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக்
கொண்டுவருவதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முனைப்புடன்
செயலாற்றினார்.
அந்த இலக்கை எட்டுவதற்காக அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய
ராஜபக்ஸ மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் பாரிய பங்களிப்பினை
வழங்கியிருந்தனர்.
2010 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகத் தெரிவு
செய்யப்பட்ட மஹிந்த ராஜபக்ஸ பொதுநலவாய அமைப்பின் தலைவராக தெரிவு
செய்யப்பட்டதுடன் இலங்கையின் நற்பெயரை சர்வதேச அரங்கில் நிலைநிறுத்தினார்.
அத்துடன், பரிசுத்த பாப்பரசரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்த பெருமையும் அவரையே சாரும்.
மஹிந்த ராஜபக்ஸவினைத் தொடர்ந்து இன்று முதல் ஶ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவும் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட தலைவராகத்
திகழ்கின்றார்.
அவர் தனது 17 ஆவது வயதில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவ இளைஞர் அமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது மட்டக்களப்பில் சிறைவாசம் அனுபவித்த
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 1978 ஆம் ஆண்டு ஶ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் நிலையான உறுப்பினரானார்.
சுதந்திரக் கட்சியின் இளைஞர் சம்மேளனத்தில் பதவிகளை வகித்து பொலன்னறுவ
மக்களின் ஆணையினால் 1982 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவு
செய்யப்பட்டார்.
2001 ஆம் ஆண்டில் கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன பல அமைச்சுப் பதவிகளை வகித்து நாட்டிற்கு
சேவையாற்றினார்.
2009 ஆண்டு மே மாதம் யுத்தத்தின் இறுதித் தருணத்தில் பல
சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் அவர் தனது கடமையை
அச்சமின்றி நிறைவேற்றினார்.
2013 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு மற்றும் ஹாவட் பல்கலைக்கழகத்தின்
விருதுகளை சுவீகரித்த அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு
செல்லாத தலைவராகவும் விளங்கினார்.
நன்றி: Newsfirst
0 Comments:
Post a Comment