11 Jan 2015

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் நாளை மறுதினம் வருகிறார்

SHARE
பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் திருத்தந்தையின் இலங்கை விஜயத்துக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும்  பரிசுத்த பாப்பரசர் நாளை மறுதினம் (13) காலை 8 மணியளவில் இலங்கையை வந்தடைவார் எனவும் பாப்பரசரின் இலங்கை விஜயத்தின் ஊடக இணைப்பாளரான அருட்தந்தை சிறில்  காமினி தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில் பரிசுத்த பாப்பரசரின் வருகைக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன. பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ஆண்டகை எதிர்வரும் 13 ஆம் திகதி காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவார்.

அங்கு இடம்பெறும் அரச வரவேற்பு நிகழ்வை அடுத்து பரிசுத்த பாப்பரசர் திறந்த வாகனம் மூலமாக கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதி ஊடாக  கொழும்பை வந்தடைவார். இதன்போது பாதையின் இருமருங்கிலும் பொதுமக்கள் நின்று அவரை வரவேற்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

கொழும்பு வத்திக்கான் தூதரகத்துக்கு செல்லும் பரிசுத்த பாப்பரசர்  இலங்கைக்கான அப்போஸ்தலிக்கப் பிரதிநிதியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். தொடர்ந்து கொழும்பு பேராயர் இல்லத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையினர் பரிசுத்த பாப்பரசரை சந்திக்கும் வைபவம் இடம்பெறும். இவ்வைபவத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் இலங்கை கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர்கள் கலந்து கொள்வர்.

அன்றையதினம் பிற்பகல் 02 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கையின் சர்வமத தலைவர்களை  சந்திக்கவுள்ளார்.

அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாப்பரசருக்கும் இடையிலான உத்தியோகப+ர்வ சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின் போது பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயத்தை குறிக்கும் ஞாபகார்த்த முத்திரையும் புனிதராக திருநிலைப்படுத்தப்படவுள்ள யேர்சேவ் வாஸ் அடிகளாரை அறிவிக்கும் நினைவு முத்திரையும் விசேட நாணயக்குற்றிகளும் வெளியிடப்படவுள்ளன.

14 ஆம் திகதி காலை பரிசுத்த பாப்பரசர் கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட திருப்பலிப் ப+சையை ஒப்புக்கொடுப்பார். அங்கிருந்து மக்களுக்கு ஆசி வழங்கும் பாப்பரசர் முத்திபேறு பெற்ற ஜோசேவ் வாஸ் அடிகளாரை புனிதராக அறிவிப்பார்.

அன்று பிற்பகல் மடுத்திருத்தலத்திற்கு விஜயம் செய்யும் பாப்பரசர் மடு தேவாலயத்தில் விசேட ஆராதனைகளில் கலந்துகொள்வார். 15 ஆம் திகதி காலை இலங்கையிலிருந்து பிலிப்பைன்ஸ்க்கு விஜயம் மேற்கொள்ளும் பாப்பரசர் கொழும்பிலிருந்து கட்டுநாயக்கவிற்கு செல்லும் வழியில் போலவலானை ஜோசேவ் வாஸ் கல்வி நிலையத்தை உத்தியோகப+ர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைப்பார் என தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: