கல்முனை கரையோர மாவட்டத்தை உடனடியாக வர்த்தமானி அறிவித்தல் செய்ய முடியா
விட்டாலும் அது தொடர்பில் எழுத்துமூல உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடக்
கூட முன்வராத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்க்காலத்தில் முஸ்லிம்களின்
நலன்களில் கரிசனை செலுத்துவார் என்று எவ்வாறு நம்ப முடியும் என கிழக்கு
மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவரும் அக்கட்சியின் சர்வதேச
விவகாரங்களுக்கான பிரதிப் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் கேள்வி
எழுப்பியுள்ளார்.
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து சாய்ந்தமருது,
சம்மாந்துறை, மருதமுனை, நிந்தவூர், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை உட்பட
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்
ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரசார கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே
அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் அடையாளத்தை பெற்றுத் தந்த ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் அந்த சமூகத்தின் எதிர்பார்ப்பினை
தவிடுபொடியாக்கிய சரித்திரம் இல்லை. அந்த வகையில்தான் நமது தலைமைத்துவம்
மக்களின் உணர்வுகளை மதித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான
நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இந்த முடிவை மேற்கொள்வதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்று மக்கள்
அங்கலாய்த்து ஆவேசப்பட்டத்தை நாம் அறியாமல் இல்லை. கட்சியின் மக்கள்
பிரதிநிதிகள் 183 பேரையும் ஒட்டுமொத்தமாக வெளியே கொண்டு வந்து கட்சிக்கு
எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் காய்நகர்த்தல்களை செய்ய வேண்டியிருந்தது.
அதில் எமது தலைமைத்துவம் வெற்றி கண்டுள்ளது. இந்த நல்ல செய்திக்காகவே
முடிவை அறிவிப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டிருந்தது.
அதேவேளை இறுதி நிமிடம் வரை கரையோர மாவட்டத்திற்கான அழுத்தங்களைக்
கொடுத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அரசாங்கம் வேண்டுமென்று காலத்தை இழுத்தடித்து வந்தது. வர்த்தமானி
அறிவித்தல் செய்ய முடியா விட்டாலும் அது தொடர்பில் எழுத்து மூல உடன்படிக்கை
ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்வருமாறு முஸ்லிம் காங்கிரஸ் விடுத்த
கோரிக்கையையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் அரசிடம் தொடர்ந்தும் மண்டியிட வேண்டிய தேவை எமக்கில்லை என்ற
முடிவை தலைமைத்துவம் மேற்கொண்டது. இது மிகவும் சாணக்கியமான முடிவாகும்.
கட்சியின் முடிவு தாமதமானபோது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,
ஜனாதிபதி மகிந்தவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்த்துள்ளார்- பணப்பரிமாற்றம்
இடம்பெற்றுள்ளது என்றெல்லாம் போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அமைச்சுப் பதவிகளோ பணமோ முஸ்லிம் காங்கிரசுக்கு முக்கியமல்ல. அவற்றுக்கு
நாம் அடிமைப்பட்டவர்களல்ல. நாம் என்றும் சமூகத்தை முன்னிறுத்தியே
தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம். மத்திய அரசாங்கத்திலும் கிழக்கு
மாகாண சபையிலும் முஸ்லிம் காங்கிரஸ் பங்காளிக் கட்சியாக இருந்த காலப்
பகுதியில் கூட சமூகப் பிரச்சினைகளுக்காக துணிந்து குரல் எழுப்பி வந்தோம்.
ஒருபோதும் எந்தவொரு சக்திக்கும் அடிமைப்பட்டோ அச்சப்பட்டோ நாம்
மௌனித்திருக்கவில்லை.
பேருவளை, அளுத்கம வன்முறைகளின் போது நாம் அரசாங்கத்தை தீவிரமாக
கண்டித்தோம். அரபு, முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து முறையிட்டோம்.
ஜனாதிபதி மஹிந்த நேரடியாக தலையிட்டு எமது முயற்சிகளை மழுங்கடிக்க
எத்தனித்தார். நாம் பின்வாங்கவில்லை. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு
ஜனாதிபதி மகிந்தவை எச்சரிக்கும் அளவுக்கு எமது செயற்பாடுகள் அமைந்திருந்தன.
இவ்வாறுதான் முஸ்லிம் காங்கிரசின் சமூகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது. தனி நபர்களின் அபிலாஷைகளுக்காக சமூகத்தை விலை பேசுகின்ற
கட்சியல்ல முஸ்லிம் காங்கிரஸ். அது மறைந்த பெரும் தலைவரினால் இரத்தம்
சிந்தி- உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட ஒரு சமூக விடுதலை
இயக்கமாகும் என்பதை எவரும் மறந்து விடக் கூடாது.
ஆனால் அந்த சமூக இயக்கத்தின் மூலம் அரசியல் முகவரி பெற்றுக் கொண்ட
அமைச்சர் அதாவுல்லா போன்றோர் இன்று மகிந்த ராஜபக்ஷவின் அராஜகத்திற்கு தலை
வணங்கிக் கொண்டு அவரை ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்கள் தமது பதவிகளுக்காக
சமூகத்தை அடகு வைப்பதற்கு துணிந்து விட்டார்கள் என்றுதான்அர்த்தமாகும்”
என்று ஜெமீல் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம்
ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசிம்
கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீத்
உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின்
உயர் பீட உறுப்பினர்கள் என பல பிரமுகர்களும் இக்கூட்டங்களில்
பங்கேற்றிருந்தனர்.(mm)
0 Comments:
Post a Comment