25 Jan 2015

கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கப்படுவதே நியாயமானது – மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம்

SHARE
நீதி, நியாயம், சத்தியம் என்பவற்றின் அடிப்படையிலேயே சமூகங்கள் சிந்திக்கவும் செயற்படவும் வேண்டும். பல்வேறு சமூகங்கள் வாழுகின்ற நாட்டிலோ, பிரதேசத்திலோ எல்லாவற்றையும் ஒரு சமூகமே பெற்றுக்கொள்ள நினைப்பதும், அனுபவிக்க நினைப்பதும்  நீதியும் நியாயமும் ஆகாது. அங்கே விட்டுக் கொடுப்பதும் வேண்டிக் கொள்வதும் சத்தியத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும். ஒரு சமூகத்திற்கு இருக்கின்ற விருப்பும் அபிலாசைகளும் மற்றுமொரு சமூகத்திற்கும் இருக்கும் என்பதை ஒவ்வொரு சமூகமும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் ஒவ்வொரு சமூகத்தினராலும் ஜனனாயக விழுமியங்கள் மதிக்கப்படவும் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும்.
 
என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சிவில் சமூகம், இன்று ஞாயிற்றுக் கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளதவது….

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே முஸ்லீம் காங்கிரசைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும்   சிறுபான்மை இனங்களிடையே  ஒற்றுமையை ஏற்படுத்தி ஒன்றாக செயற்பட வேண்டும் என்ற  உயரிய நோக்குடன் கிழக்கு மாகாண முதலமைச்சுப் பதவியை சகோதர இனமான முஸ்லீம் சமூகத்தினருக்காக விட்டுக் கொடுக்கவும்  முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரசிடம் இணக்கம் தெரிவித்திருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அன்றைய அரசைக் கடுமையாக விமர்சித்து வந்திருந்த முஸ்லீம் காங்கிரசும் நிச்சயமாக இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆளும் என்றே பலரும் எதிர்பார்த்திருந்தனர். தமிழர் சமூகமும் அதையே விரும்பியுமிருந்தது.

ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணக்கத்தை புறந்தள்ளி தங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அன்றைய அரசுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை அமைத்துக் கொண்டது.

அந்த ஆட்சியில் இஸ்லாமியர் ஒருவருக்கு முதலமைச்சுப் பதவியையையும் கொடுத்து ஏனைய மாகாண அமைச்சுக்களையும் தங்களிடையே பகிர்ந்து கொண்டு எந்த ஒரு தமிழ் மகனுக்கும் எந்த ஓர் உயர் பதவியையும்; கொடுக்காமலும் கொடுக்கக்கூட நினைக்காமலும் முஸ்லீம் காங்கிரஸ் நடந்து கொண்டதானது தமிழ் மக்களிடையே பெரும் வேதனையையும் ஏமாற்றத்தையும் உருவாக்கியிருந்ததை மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் அறியும்.

அதேவேளை அன்றைய மத்திய அரசிலும்கூட அமைச்சுப் பொறுப்புக்களையும்  பிரதி அமைச்சுப் பொறுப்புக்களையும் அவர்கள் தங்களுக்குள் பெற்றுக் கொண்டு தங்கள் சமூகத்திற்கு சகல விதமான சலுகைகளையும் பெற்று கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் தங்களோடு காலம் காலமாக வாழ்ந்து வருகின்ற சிறுபான்மை இனமான தமிழர்களை முஸ்லீம் காங்கிரஸ் மறந்து போனமையானது மிகவும் வேதனைக்குரியதொன்றாகும்.

இன்றைய புதிய மத்திய அரசிலும்கூட முஸ்லீம் காங்கிரசும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லீம் சகோதரர்களும்  அமைச்சுப் பொறுப்புக்களையும் பிரதி அமைச்சுப் பொறுப்புக்களையும் எடுத்துக் கொண்டிருக்கின்றதும்  அரசியல் காய் நகர்த்தல்களை தங்கள் சமூகத்திற்காக மேற்கொள்ளுகின்றதும்; வரவேற்கத் தக்கதே. அதே நேரம்; மற்றைய சமூகத்தவர்களின் உரிமைகள்  சலுகைகள் என்பவற்றை மதித்துப் பேணுவதும் அவர்களது தார்மீகப் பொறுப்பாகும் என மட்டக்களப்பு மக்கள் கருதுகின்றார்கள்.
 
கிழக்கு மாகாணத்திலே 40 வீதமானவர்கள் தமிழர்களும் 37 வீதமானவர்கள் இஸ்லாமியர்களும் 23 வீதத்தினர் சிங்களவர்களும் வாழுகின்றனர். அது மட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாhபில் 11 மாகாணசபை உறுப்பினர்களும் முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 7 மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளனர்.  இந்நிலையிலும்கூட கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சுப் பதவி தங்களுக்கே தரப்படல் வேண்டும் என்று முஸ்லீம் காங்கிரஸ்; கேட்பது நியாயம் தானா? என தமிழ் மக்களிடையே பெரும் கேள்வி எழுந்து நிற்கிறது.
 
ஒன்றாக வாழ வேண்டியவர்களாகிய நாம் நியாயத்தின் அடிப்படையிலே ஒருவருக்கொருவர் விட்டக் கொடுத்தும் புரிந்து கொண்டும் வாழ வேண்டியது காலத்தின் தேவையாகும்.

நிலமையை சீர் தூக்கிப் பார்க்கையில் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுவதே முற்றிலும் நியாயமானது என இவ்வறிக்கையூடாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: