27 Jan 2015

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீப்பு போராட்டம்

SHARE

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் கவனயீப்பு போராட்டம்

புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் தங்களது பிரச்சினைகளையும் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம், பேரணி நடத்தப்பட்டுள்ளது. 
நேற்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2011ஆம் ஆண்டு பட்டதாரிகள் நியமனத்தில் உள்ளீர்க்கப்படாதவர்கள் மற்றும் 2012,13,14ஆம் ஆண்டு பட்டப்படிப்பனை நிறைவு செய்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

´ஏமாற்றாதே, ஏமாற்றாதே´, ´புதிய பிரதமரே வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தாருங்கள´, ´பட்டதாரிகள் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தாருங்கள´; போன்ற பல்வேறு வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் ஏந்தியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் 500க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை சம்பவ இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், மா.நடராசா, ஞா.வெள்ளிமலை ஆகியோர் ஆர்ப்பாட்டகாரர்களுடன் கலந்துரையாடினர்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகர் ஊடாக பேரணியாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் உ.உதயவேந்தன், தமது நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாங்கள் இன்று பல துன்பங்களுடன் வாழந்து வருகின்றோம். அவற்றினை கருத்தில்கொண்டும் எமது நிலையின் உண்மைத் தன்மையையும் கருத்தில் கொண்டு உடனடியாக புதிய அரசாங்கம் தமது நூறு நாள் வேலைத்திட்டத்தில் எங்களுக்கு அரச நியமனத்தினை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

நாங்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றோம். உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றது. ஆனால் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அது இடைநிறுத்தப்பட்டது.

எமது கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுமானால் வேறு வகையான போராட்டங்களையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையேற்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களை சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் பொதுநிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்போதே எம்மால் செய்யமுடியும். இதில் மாவட்ட அரச அதிபரினால் எந்த நியமனத்தினையும் வழங்க முடியாது என்றார்.
SHARE

Author: verified_user

0 Comments: