5 Jan 2015

மருதமுனையில் வெள்ள நிவாரணம் வழங்கும் நிகழ்வு

SHARE
நாட்டில் பெய்து வந்த கடும் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்ட மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரணம் வழங்கும் நிகழ்வு நேற்று மருதமுனையில் 3ம் பிரிவு கிராம உத்தியோகத்தர் எம்.என்.பாத்திமா சூபா தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் அம்பாரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு அபிவிருத்தி மன்றத்தின் இணைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான இஸட்.ஏ.எச்.றஹ்மான்; அம்பாரை மாவட்டச் செயலாளர் நீல்; டி அல்விஸ் இடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த நிவாரணம் அம்பாரை மாவட்டமெங்கும் தற்போது வழங்கப்பட்டுவருகின்றது.

தனி நபரைக் கொண்ட குடும்பததிற்கு 700ரூபா பெறுமதியான அரிசி,பருப்பு,சீனி,கருவாடு ஆகிய உலர் உணவுப் பொருட்களைக் கொண்ட பொதியும், இருவரைக் கொண்ட குடும்பத்திற்கு 900ரூபா பெறுமதியான பொதியும்,மூன்று பேரைக் கொண்ட குடும்பத்திற்கு 1100ரூபா பெறுமதியான பொதியும், நான்கு பேரைக் கொண்ட குடும்பத்திற்கு 1300ரூபா பெறுமதியான பொதியும்,ஐந்து பேருக்கு மேற்பட்ட குடும்பத்திற்கு 1500ரூபா பெறுமதியான பொதியும் வழங்கப்பட்டு வருகின்றது.

கல்முனை பிரதேச செயலக முஸ்லிம் பிரிவில் 5085 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் முதல் கட்டமாக சுமார் 2500 குடும்பங்களுக்கு இந்த நிவாரணப் பொதிகள் வழங்கப்படுவதாகவும்,ஏனைய குடும்பங்களுக்கு பின்னர் வழங்கப்படும் என பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.(mm)
SHARE

Author: verified_user

0 Comments: