5 Jan 2015

ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் முடிவு

SHARE
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகின்றது.

வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னர் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும். அதற்கமையவே இன்று நள்ளிரவு 12 மணியுடன் அனைத்து பிரசார நடவடிக்கைகளும் முற்றுப்பெறவுள்ளன.

இதன்படி அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் எந்தவோர் அரசியல் கட்சியையோ அல்லது சுயேச்சைக் குழுவினதும் வேட்பாளர் ஒருவரையோ ஊக்குவிக்கும் வகையிலான பிரசாரங்களை மேற்கொள்வது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் செயலாகுமென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அதற்கமைய கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பிலான பிரசார வர்த்தக விளம்பரங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கைகள், கடிதங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை பிரசுரித்தலோ அல்லது பிரசாரம் செய்வதோ சட்டப்படி குற்றமாகுமெனவும் அவர் கூறினார்.

எனினும் இன்று (05) நடைபெறும் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேச்சைப் குழுக்களின் இறுதிப் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பான தகவல்களை மாத்திரம் 06ஆம் திகதி பகிரங்கப்படுத்தலோ அல்லது பிரசாரம் செய்யவோ இடமளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான போதும் செய்திகள் தாமதித்துக் கிடைப்பதன் காரணமாக அவற்றை 07ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: