நாட்டின் அனைத்து மக்களினதும் குறிப்பாக முஸ்லிம்களினதும்
பாதுகாப்பு மற்றும் அடைக்கலம் தொடர்பில் சர்வ வல்லமை கொண்ட இறைவனுக்கு
அடுத்தபடியாக நீங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன் என ஸ்ரீ லங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள இராஜினாமாக் கடிதத்தில்
தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழியிலான அவரது கடிதத்தின் முழுமையான தமிழாக்கம் வருமாறு:
உங்கள் முன் ஒரு தீர்க்கமான ஜனாதிபதித் தேர்தல் உள்ள நிலையில்
இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதானது சங்கடமாக உள்ளது. உங்கள்
தலைமைத்துவத்தில் எவ்விதமான வெறுப்போ மனக் கசப்போ
நம்பிக்கையின்மையோ எனக்கில்லை. அவ்வாறான விடயங்களுக்காக இந்த
இராஜினாமா முடிவை நான் எடுக்கவில்லை.
எனது அறிவுக்கு அமைய உங்களால் கடந்த 9 வருடங்கள் இலங்கை தாய்
நாட்டுக்கு செய்த சேவைகள் மிக விசேடமானவை. நிறைவேற்று ஜனாதிபதி என்ற
ரீதியில் நீங்கள் அதனை செய்தீர்கள் என்பது தெளிவானதாகும். இதுவரை
இருந்த எந்தவொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியினாலும்
முடியாமல் போன விசேட செயல் திட்டத்தினை நீங்கள் முன்னெடுத்தீர்கள்.
அதாவது 30 வருட கால கொடிய யுத்தத்தை நீங்கள் முடிவுறுத்தினீர்கள்.
நாட்டை நேசிக்கும் பிரஜை என்ற ரீதியில் நீங்கள் நாட்டில் உள்ள அனைத்து
பிரஜைகளுக்கிடையிலும் சமாதானத்தை நிலைநாட்ட எடுத்த
நடவடிக்கைகளை எனது வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது.
இந்நிலையில் எனது இராஜினாமாவுக்கான காரணங்கள் வருமாறு
01. எனது அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கும்
தீர்மானங்களுக்கு நான் உடன்படுவதாக பொருந்தியுள்ளமை.
02. முஸ்லிம்களுக்கு மத்தியில் நான் கட்சிக்கு துரோகியாகி விட்டேன் என்ற கருத்துக்கள் பரவுவதை தடுக்க.
03. நான் அதிகார பேராசை கொண்டவன் அல்ல என்பதை உறுதி செய்ய
04. அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த போதும் இந்த
தீர்க்கமான கால கட்டத்தில் உங்கள் வெற்றிக்கு போதுமான வாக்குகளை
பெற்றுத் தர சந்தர்ப்பம் இல்லாமை.
இந்த காரணங்களினாலேயே நான் இராஜினாமா செய்கிறேன். உங்கள்
நம்பிக்கைகளை தகர்க்கும் ஒருவனாக என்னை பார்க்க வேண்டாம் என தயவுடன்
வேண்டுகிறேன்.
நான் முகம் கொடுத்துள்ள இந்த இக்கட்டான நிலைமையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்.
எவ்வாறாயினும் எனதும் உங்களதும் மேம்பாட்டுக்கு பாதிப்பை
ஏற்படுத்தும் எந்தவொரு தேர்தல் பிரசார நடவடிக்கையிலும் எந்த
வகையிலும் நான் சம்பந்தப்படமாட்டேன் என்பதை உறுதியாக கூற
விரும்புகிறேன்.
இந்த நிச்சயமற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் அனைத்து மக்களினதும்
குறிப்பாக முஸ்லிம்களினதும் பாதுகாப்பு மற்றும் அடைக்கலம் தொடர்பில்
சர்வ வல்லமை கொண்ட இறைவனுக்கு அடுத்தபடியாக நீங்கள் இருப்பதாக
நான் நம்புகிறேன்.
நீங்கள் அன்று எனக்கு வழங்கிய வரப்பிரசாதங்களுக்கு நன்றி
தெரிவிக்கவும் இச் சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.
ஏனெனில் 2013 ஜனவரி மாதம் எந்தவொரு நபரினதும் சிபாரிசுகள் இன்றி
உங்கள் நன்மதிப்பின் படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை
எனக்கு வழங்கும் அளவுக்கு நீங்கள் கருணையாளர். அத்துடன் கடந்த இரு வருட
காலப் பகுதியில் எனது அமைச்சை அதன் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல
நீங்கள் வழங்கிய அனுசரணையும் வழிகாட்டல்களையும் நான் மிக நன்றியோடு
நோக்குகிறேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வேட்பாளர் என்ற ரீதியில் அதி விசேடமான வெற்றியினை பெற திறந்த மனதுடன் பிரார்த்திக்கிறேன்.(mm)
0 Comments:
Post a Comment