எதிர்வரும் 2015 ஜனவரி 29ம் திகதி புதியதொரு வரவு செலவுத்திட்டத்தை
கொண்டுவந்து அரசாங்க உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள்,
பாதுகாப்பு அதிகாரிகள் சகலரும் இந்த நாட்டில் கௌரவம் மிக்கவர்களாக
செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய பொதுமக்கள் நிம்மதியாக
சந்தேசமான முறையில் தமது வாழ்கை செலவை சமாளிக்கும் வகையிலான
செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின்
பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜெயசூரியா தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை அஸ்ரபாவட்டையில் ஜனாதிபதி பொது வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்த
கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொழில் அதிபர் ஏ.எச்.றமீஸ் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை
தொகுதி அமைப்பாளர் எம்.ஏ.ஹசன்அலி ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற
இப்பிரச்சாரக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில்.
எமது நாட்டில் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்ற ஊழல் மிக்க மஹிந்த ராஜபக்ஷவின்
கொடிய ஆட்சியினை முடிவுக்கு கொண்டவந்து எதிர்வரும் ஜனவரி 09ம் திகதி
மலரவுள்ள மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்
ரணில் விக்ரம அவர்கள் பிரதமராக பிரதான பாத்திரத்தை வகிக்கவுள்ளார்.
இன்று இந்த நாட்டிலே சிங்கள மக்களுடன் சிறுபான்மை மக்களான முஸ்லிம்களும்,
தமிழர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஒரு நேர்மையான ஆட்சியினை நிறுவ ஒன்று
திரண்டுள்ளனர். ரீ.பீ.ஜயா, கலீல் போன்ற பெரும் தலைவர்கள் உருவாக்கிய ஐக்கிய
தேசிய கட்சியினை மையமாக கொண்ட அமைப்புடன் மக்கள் அணி திரண்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி பிரிவினையினை தோற்கடித்து சமூக ஒற்றுமையினை
ஏற்படுத்துகின்ற மக்களை நேசிக்கின்ற ஒரு அமைப்பாகும் இந்த நாட்டையும்
நாட்டு மக்களையும் அங்கு வாழுகின்ற மக்களுடைய மதத்தையும் நேசிக்கின்ற ஒரு
கட்சியாகும்.
இந்த நாட்டிலே நடைபெற்று வருகின்ற குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக
பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து இந்தக் கூட்டை
ஏற்படுத்தியுள்ளோம்.
மைத்திரிபால சிறிசேன அவர்கள் அமோக மக்களின் ஆதரவை பெற்று ஆட்சிபீடம்
ஏறவுள்ளார். இதனால் இந்த நாட்டு மக்களுக்கு சிறப்பானதொரு ஆட்சியினை
ஏற்படுத்தவுள்ளோம்.
எமது தேர்தல் விஞ்ஞாபனம் பலதரப்பட்ட நிபுணர்கள் குழுக்களை கொண்டு தயாரித்துள்ளோம்.
நிறைவேற்று அதிகார முறை மாற்றப்படும் 2015 ஏப்ரல் 20ம் திகதி பாராளுமன்றம்
கலைக்கப்பட்டு புதிய தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற பாராளுமன்ற
பிரதிநிதிகளுடன் பிரதமர் ஆட்சிமுறை கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்ற
உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, அனோமா கமகே,
எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்,
மாகாண சபை உறுப்பினர்களான தயாகமகே, சந்திரதாச கலபதி, ஸ்ரீலங்கா முஸ்லிம்
மக்கள் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் உட்பட ஐக்கிய தேசிய
கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்த கொண்டனர்.(ml)
0 Comments:
Post a Comment