13 Jan 2015

ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்க சூழ்ச்சி எதுவும் செய்யவில்லை என மஹிந்த மறுப்பு!

SHARE
ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அவதானித்த பின் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியானதை அடுத்து அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்க முன்வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தினத்தன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியிடம் அமைதியான அதிகார மாற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி உறுதி அளித்ததாக அவரது பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் நாளன்று தான் தோல்வியுற்றாலும் ஆட்சி அதிகாரத்தில் இருத்த ஒத்துழைப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்திடம் கோரியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் சூழ்ச்சி செய்ததாகவும் ஆனால் எதிரணி தலைவர்கள் இராஜதந்திர ரீதியில் தொடர்புகளை ஏற்படுத்தியும் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பை பெற்றும் முன்னாள் ஜனாதிபதியின் முயற்சிகளை முறியடித்து அமைதியான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இராணுவத்தை அனுப்பி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஒத்துழைப்புமாறு இராணுவ பிரதானியிடம் முன்னாள் ஜனாதிபதி கேட்டுக் கொண்ட போது இராணுவ அதிகாரி அதனை மறுத்துவிட்டதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஊடகத்திடம் தெரிவித்தார்.

ஆனால் தாம் இராணுவ பிரதானியை அழைத்து அவ்வாறு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அதன்படி அவர் இராணுவத்தினரை முகாமுக்குள் முடக்கி வைத்ததாகவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.

ஆனால் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் ஜனநாயக மரபுகளை சீர்குலைக்கும் வகையில் செயற்பட மாட்டார்கள் என ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: